Published : 29 Sep 2018 11:39 AM
Last Updated : 29 Sep 2018 11:39 AM
தேசிய காட்டுயிர் வார விழா: அக்டோபர் 2-8 |
‘மனிதர்கள் உருவாக்கும் எந்த ஒரு பொருளுக்கும், இயற்கையிலிருந்தே மூலப்பொருள் கிடைக்கிறது’ என்பார்கள். அப்படியான இயற்கைக்கே நம்மால் விலை வைக்க முடியுமா? ‘முடியும்’ என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
2015-ல் ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரஸ்ட் மேனேஜ்மெண்ட்’டைச் சேர்ந்த மது வர்மா மற்றும் அவரது குழுவினர், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து ‘எகனாமிக் வேல்யூவேஷன் ஆஃப் டைகர் ரிசர்வ்ஸ் இன் இந்தியா’ எனும் தலைப்பில் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டனர்.
அதிர்ச்சி அளித்த ஆய்வு
அதில், நாட்டில் உள்ள 6 முக்கியப் புலிக்காப்பகங்களில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும், அப்போது ஒரு புலிக் காப்பகத்தில், ஒரு வருடத்துக்கு, ஒரு ஹெக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வரையில், புலிக் காப்பகங்களிலிருந்து கிடைக்கும் பலன்களின் மதிப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக, இந்தப் பகுதிகளில் அதிக அளவு முதலீடு செய்யலாம் என்றும், அப்படிச் செய்தால் அது புலிகளைப் பாதுகாப்பதற்கு உதவும் என்றும் கூறப்பட்டது.
அந்தக் கட்டுரை, சூழலியலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் 2017-ல், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தை (எம்.ஐ.டி.எஸ்) சேர்ந்த பேராசிரியர் அஜித் மேனன், பெங்களூருவில் உள்ள ‘அசோகா ட்ரஸ்ட் ஃபார் ரிசர்ச் இன் ஈக்காலஜி அண்ட் தி என்விரான்மெண்ட்’ எனும் அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர் நிதின் ராய் ஆகியோர், ‘இயற்கை வளங்களை ஏன் பொருளாதார ரீதியாக மதிப்பிட வேண்டும்? புலிகள் காப்பகங்களில் முதலீடு செய்வதற்கான அவசியம் என்ன? அது யாருக்குப் பயன்படப் போகிறது?’ என்பன போன்ற கேள்விகளை எழுப்பும் விதமாக, ‘எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி’ இதழில் ‘புட்டிங் அ பிரைஸ் ஆன் டைகர் ரிசர்வ்ஸ்’ எனும் கட்டுரையை வெளியிட்டனர்.
அதைத் தொடர்ந்து சமீபத்தில், நிதின் ராய் தலைமையிலான ஆய்வுக் குழு, ‘பொலிடிக்கல் ஈக்காலஜி ஆஃப் டைகர் கன்சர்வேஷன் இன் இந்தியா’ எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கர்நாடக மாநிலத்தில் உள்ள பிலிகிரி ரங்கசுவாமி கோயில் மலைத் தொடரில் உள்ள புலிகள் காப்பகம் பற்றியும், அங்கு வாழும் சோளகர் பழங்குடியினர் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றியும் சொல்லப்பட்டிருக்கின்றன. நிதின் ராய் அங்கே சுமார் 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார். அவரது சக ஆய்வாளரான அஜித் மேனனிடம், ‘காட்டுயிர் வார விழா’வை முன்னிட்டு, மேற்கண்ட பிரச்சினைகள் குறித்துப் பேசியதிலிருந்து…
மதிப்பு இழக்கும் காடுகள்
“தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் பரந்து விரிகிறது பிலிகிரி ரங்கசுவாமி கோயில் மலைத் தொடர். சுமார் 5 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்தப் பகுதி
1986-ல் ‘நீலகிரி உயிர்க்கோளப் பகுதி’யாக அறிவிக்கப்பட்டது. இங்கு, கர்நாடகத்தில் மூன்று, தமிழகத்தில் இரண்டு என்ற கணக்கில் புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில், கர்நாடகாவில் உள்ள மலைத்தொடரில், குறிப்பிட்ட சில பகுதிகளில் சோளகர் எனும் பழங்குடியினர் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு வேட்டையாடும் பழக்கம் இருந்தது. கடமான், புள்ளிமான், காட்டுப் பன்றி போன்றவற்றை உணவுக்காக வேட்டையாடி வந்தனர். ஆனால், 70-களில் காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டங்கள் வந்த பிறகு, வேட்டையாடுவது தடை செய்யப்பட்டது. இதனால் மேற்கண்ட உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும், அவர்கள் மேற்கொண்டு வந்த காட்டெரிப்பு வேளாண்மை போன்றவையும் தடை செய்யப்பட்டன. இதனால், அங்கு மண் வளம் குன்றி, ‘லேண்டனா கமரா’ (உன்னி செடி) போன்ற அயல் தாவரங்கள் பெருகி, சோளகர்களுக்குப் பயன்பட்டு வந்த உள்நாட்டு தாவர வகைகள் வளராமல் தடுக்கப்பட்டன. அதனால் இப்போது அந்தக் காடே மதிப்பிழந்து வருகிறது.
இந்தப் பகுதி புலிக் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பின்பு தேன், கிழங்குகள், பழங்கள் போன்ற காட்டு விளைபொருட்களால் அவர்கள் அடைந்து வந்த பலன் கிடைப்பதும் அரிதானது. இதனால் பெரும்பாலான மக்கள், அந்தப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து, காபித் தோட்டங்களில் கூலித் தொழிலாளர்களாகிவிட்டனர்.
‘தவறை நியாயப்படுத்துகிறார்கள்!’
காடுகளுக்கும் பழங்குடியினருக்குமான உறவு பின்னிப் பிணைந்தது. பழங்குடியினர் மூலமாகத்தான் காடுகளைப் பாதுகாக்க முடியும் எனும் வாதமும் இங்கே பல காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், ‘புலிகளைப் பாதுகாக்கிறோம்’ என்று சொல்லிவிட்டு, பழங்குடிகளை வெளியேற்றும் நிகழ்வுகள்தாம் அரங்கேறி வருகின்றன. இந்தப் பின்னணியில்தான் மது வர்மா உள்ளிட்டோரின் கட்டுரையைப் பார்க்க வேண்டும். மக்களை வெளியேற்றிவிட்டு, அந்தக் காட்டிலிருந்து கிடைக்கும் பலன்களை யாருக்கு வழங்கப் போகிறோம்?
மது வர்மா குழுவினரின் கட்டுரையைப் பற்றி சோளகர் தலைவர்களில் ஒருவரான அச்சுகே கவுடாவிடம் கருத்து கேட்டபோது, அவர், “புலிகளைப் பாதுகாக்கிறோம் என்று சொல்லி, காட்டிலிருந்து மக்களை வெளியேற்றுவதை நியாயப்படுத்தவே, இயற்கை வளங்களுக்குப் பொருளாதார மதிப்பு வழங்கப்படுகிறது” என்றார். எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் அவை!
அந்தக் குழுவினரின் ஆய்வுக் கட்டுரையில், சோளகர்களின் கலாச்சார, வரலாற்றுக் கூறுகள் எல்லாம் கணக்கில் கொள்ளப்படவேயில்லை. அவற்றுக்கெல்லாம் விலை வைக்க முடியுமா? அங்குள்ள பாறைகள் நமக்கு வேண்டுமானால் வெறும் கற்களாக இருக்கலாம். ஆனால், அவற்றை அவர்கள் தெய்வமாக வணங்குகிறார்கள். அதேபோல, அவர்களுக்கு வன உரிமைச் சட்டத்தின்படி, காட்டுக்குள் தங்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொள்ள சில உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ‘பொருளாதார மதிப்பிடல்’ கொண்டு வரப்பட்டால் அந்த உரிமைகள் காணாமல்போவதற்குச் சாத்தியங்கள் உண்டு.
பணம் இருந்தால் ஜீப், ட்ரோன்கள் போன்ற அடிப்படையான விஷயங்களை வாங்கி, புலிகளைக் காப்பாற்றிவிட முடியும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அது மிகவும் தவறான பார்வை. மது வர்மா குழுவின் கட்டுரை சொல்லும் ‘பொருளாதார மதிப்பு’ என்பது உண்மையில், பழங்குடியினருக்குப் பலன் அளிப்பதாக இல்லை. தனியாருக்கும் கார்ப்பரேட்களுக்கும் மட்டுமே பலன் அளிப்பதாக உள்ளது என்பதே எங்கள் வாதம். இதுகுறித்து இன்னும் அதிக அளவில் சொல்லாடல் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்!” என்றார் அஜித் மேனன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT