Published : 08 Jun 2019 10:26 AM
Last Updated : 08 Jun 2019 10:26 AM

ஞெகிழி பூதம் 19: குப்பை கொட்டப் போகிறீர்களா?

குப்பையை எங்கே கொட்டுவது? - யாராவது ஒருவரை நிறுத்தி இந்தக் கேள்வியைக் கேட்டால்...

இதெல்லாம் ஒரு கேள்வியா. சாலையின் ஓரத்தில் எங்கு குப்பை சேர்ந்துள்ளதோ அங்கு கொட்டலாம்; குப்பைத் தொட்டியில் கொட்டலாம்; வீட்டுக்குப் பக்கத்தில் ஏதாவது காலி மனையில் கொட்டலாம்; குளங்களிலோ ஆற்றிலோ கொட்டலாம்; ஊருக்குள் சாக்கடையை தேக்கி வைத்துள்ள உயிரற்று பாவமாய் தேங்கிக் கிடக்கும் கால்வாய்களில் கொட்டலாம் - இப்படியாக நம் கையையும் வீட்டையும்விட்டு குப்பை ஒழிந்தால் போதும். அவ்வளவுதான் இன்றைய நாகரிக சமுதாயம் குப்பைக்கு கொடுக்கும் மரியாதை.

இவ்வாறாக நாம் தூக்கி எறிந்த குப்பை மக்கக்கூடிய பொருளாக இருந்த மட்டிலும், அது ஊர் சார்ந்த அழகியல் அல்லது சுகாதார பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது. இன்று நாம் தூக்கி எறியும் குப்பையில் ஞெகிழியும் நஞ்சும் கலந்த கலவைகள் ஏராளம். எனவே, இதை உயிர் வாழும் சுற்றுசூழலுக்கு எதிரான பிரச்சினையாகவே பார்க்க வேண்டும்.

ஞெகிழியை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமானால், குப்பையைப் பற்றி முதலில் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

எது குப்பை?

வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பையை நகராட்சிக் கழிவு (Municipal Waste) என்று கூறுவது வழக்கம். இந்திய நகரங்களில் இருந்து ஆண்டுக்கு 6 கோடி டன் குப்பை வெளியேற்றப்படுகிறது. நாம் தூக்கி எறியும் குப்பைக்குள் கீழ்க்கண்ட பொருட்கள் இருக்கின்றன.

மக்கும்தன்மை கொண்ட குப்பை: காய்கறிக் கழிவுகள், உணவு, பழம், இலைகள்

நச்சுத்தன்மை கொண்ட குப்பை: மருந்துகள், வேதிப்பொருட்கள், பெயிண்ட்

மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பை: காகிதம், கண்ணாடி, ஞெகிழி, பிற உலோகங்கள்

தூக்கி எறிய வேண்டிய குப்பை (Soiled): டையபர், சானிடரி நாப்கின், சுய பராமரிப்புப் பொருட்கள்

கையாளுவது எப்படி?

மேற்கண்டவற்றில் ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு விதமாகக் கையாள வேண்டும். மக்கும்தன்மை கொண்டவற்றை மக்கவைத்து மண்ணுக்கு உரமாக்கலாம். மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீண்டும் பயன்படும் பொருட்களாக்கிவிடலாம். நச்சுத்தன்மை கொண்டவற்றை விஷமற்றதாக மாற்றிய பின்பு, மறுசுழற்சி செய்யலாம் அல்லது குப்பைக்கூடங்களில் சேர்க்கலாம். இவற்றில் சேராத பொருட்கள் மட்டுமே தூக்கி எறிய வேண்டியவை. இவ்வாறு பிரித்துக் கையாண்டால், நமது குப்பைக் கிடங்குகளில் தினமும் கால்வாசி குப்பைகூடச் சேராது. ஊரே சுத்தமாகிவிடும்.

ஆனால், நாமோ அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காலையில் வீட்டு வாசலில் வைத்துவிடுவதோடு நமது வேலை முடிந்துவிட்டது என நினைக்கிறோம். அதற்கு பிறகு மாநகராட்சி/நகராட்சி வீடு வீடாகக் குப்பையை எடுத்து, பகுதி பகுதியாகச் சேகரித்து, லாரி லாரியாக நிரப்பி, லோடு லோடாகக் குப்பைக்கூடங்களில் சேர்க்க வேண்டும். அதற்கு பிறகு அவற்றைத் தரம் பிரிக்க வேண்டும், பிரித்த குப்பையை அதற்கேற்ப கையாள வேண்டும். இதெல்லாம் நம்மூரில் முறைப்படி நடக்கிறதா? முறைப்படி நடப்பதைப் பற்றி என்றைக்காவது நாம் கவலைப்பட்டிருக்கிறோமா?

கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்
தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x