Published : 22 Jun 2019 11:20 AM
Last Updated : 22 Jun 2019 11:20 AM
நம் வீட்டில் கொட்டப்படும் குப்பையை நம்பி ஒரு பெரிய தொழில் சங்கிலி இருக்கிறது. நாம் கொட்டும் குப்பையை அள்ளுவதற்காகப் பல்லாயிரம் தொழிலாளிகள் உள்ளனர் (சென்னையில் மட்டும் 19,000 பேர்). அரசு இயந்திரம் பல கோடியைச் செலவழித்துக்கொண்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகளை இயற்றி, திடக்கழிவை நாடு முழுவதும் கையாளப் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன (Municipal Solid Waste Management Regulation 2016).
ஆனால், நிஜத்தில் என்ன நடக்கிறது? வீட்டில் வெட்டி எரிந்த காய்கறிக் கழிவுகளையும், மிச்சமான பழைய சோறையும், ஞெகிழிப் பைகளையும், பிஸ்கட் உறைகளையும், தீர்ந்து போன மருந்துப் புட்டிகளையும் வீட்டில் இருந்து எடுத்து, பெட்ரோல் போட்டு வண்டியில் ஏற்றி பல கி.மீ. தொலைவுக்குக் கொண்டு சென்று பல ஆயிரம் ஆண்டுகள் காப்பாற்றும் ‘சிறந்த நுகர்வு சமூக’மாக மட்டுமே நாம் இருக்கிறோம்.
தீர்வு
சரி, குப்பையைக் கையாளுவதற்கு என்னதான் தீர்வு? மட்கும் பொருட்களை வீட்டிலே வைத்து மட்கச் செய்யுங்கள், அது உரமாகட்டும். மக்காத பொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
பாக்கிங் செய்யப்பட்ட பொருட்களை அதிகமாக வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள். மொத்தக் கடைகளிலும், மொத்தப் பொருட்களுமாக வாங்கினால் சின்ன சின்ன சாஷே பாக்கெட்டுகள் வீட்டுக்கு வருவதைத் தவிர்க்கலாம்.
ஞாபகம் இருக்கட்டும் ஒவ்வொரு வீட்டிலும் ஞெகிழிப் பொருட்களைச் சேகரிக்க ஒரு பை அல்லது டப்பா (ஞெகிழித் தின்னி) வைத்துக்கொள்ளுங்கள். வீட்டுக்குள் சேர்ந்த ஞெகிழி, கண்ணாடி, காகிதம், உலோகப் பொருட்களை காயலாங் கடைக்கரரிடம் கொடுத்து விடுங்கள். குப்பைத்தொட்டியில் போடும் குப்பையின் அளவைப் பேரளவு குறைத்துவிடுங்கள்.
கண்டம் விட்டு கண்டம் செல்லும் குப்பை
சமீபத்தில் குப்பை சார்ந்த விஷயத்துக்காக கனடா நாட்டிலிருந்து தனது தூதரக அதிகாரிகளை பிலிப்பைன்ஸ் திருப்பி அழைத்துக்கொண்டது. நாடு முழுவதும் கனடாவுக்கு எதிரான கருத்து பரவியது. எங்கள் நாட்டைக் குப்பைத் தொட்டியாக நினைக்க வேண்டாம் என்று அந்த நாட்டு அதிபர் ரோட்ரிகோ துதெர்த்தே பேசினார்.
‘மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள்’ என்ற பெயரில் கனடாவில் இருந்து பிலிப்பைன்ஸுக்கு வந்து இறங்கிய 69 கண்டெய்னர்கள்தான் அனைத்துக்கும் காரணம். இந்த கண்டெய்னர்களில் கனடா மக்கள் பயன்படுத்திய ஞெகிழிக் குப்பை முதல் குழந்தைகள் பயன்படுத்திய அழுக்கு டையபர்வரை இருந்ததாம்.
கோபம் கொண்ட பிலிப்பைன்ஸ், இதைப் பெரிய பிரச்சினையாக்கி, தனது செலவிலே அனைத்து கண்டெய்னர்களையும் கனடா திருப்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி நிகழ்த்திக் காட்டிவிட்டது. இப்பொழுது அந்த 1,500 டன் (ஒரு டன் = 1,000 கிலோ) குப்பையும் தன் சொந்த நாட்டுக்கே சென்றுகொண்டிருக்கிறது.
அயல்நாட்டுக் குப்பையை சீனா வாங்குவதை நிறுத்திக்கொண்டதை அடுத்து, தெற்காசிய நாடுகளுக்கு இது போன்ற குப்பை கண்டெய்னர்கள் அதிகம் சென்றுகொண்டுள்ளன. விதிகளுக்குப் புறம்பாக சில வணிகர்கள் இதைச் செய்துகொண்டுள்ளனர்.
ஆக குப்பை, குறிப்பாக ஞெகிழிக் குப்பை ஒரு அழிக்க முடியாத பெரும் பூதம். கப்பல் ஏற்றி வேறு கண்டத்துக்கு அனுப்பிவைத்தாலும் மீண்டும் உருவான இடத்துக்கே திரும்ப வந்து ஆடும். அதனால் ஞெகிழிப் பொருட்களை மறுப்போம்.
கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்
தொடர்புக்கு: krishnan@theyellowbag.org
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT