Last Updated : 22 Jun, 2019 11:28 AM

 

Published : 22 Jun 2019 11:28 AM
Last Updated : 22 Jun 2019 11:28 AM

காற்றினிலே வரும் மரணம்? அணுக் கழிவு வைப்பகம்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மக்களின் மறதிக்குள் உறங்கிக்கொண்டிருந்த கூடங்குளத்தை மீண்டும் தட்டி எழுப்பியுள்ளது. 2019 ஜூலை 10 அன்று கூடங்குளத்தில் கதிரியக்கக் கழிவைச் சேமித்து வைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தை வாரியம் அறிவித்துள்ளது.

இது சென்னைப் பெருங்குடியில் குவிக்கும் குப்பையைப் போன்றதல்ல என்பதை அறிந்திருந்தாலும் நமக்கும், ‘அணுக்கழிவு ஆபத்தானது, அது அழிய நெடுங்காலமாகும்’ என்பது போன்ற அடிப்படைத் தகவல்களைத் தாண்டி மேலும் தெளிவான புரிதல் தேவைப்படுகிறது.

கழிவு எனும் கவலை

1972-ல் ஆப்பிரிக்காவில் கபோன் அருகிலுள்ள ‘ஓக்லோ’ எனுமிடத்தில் ஃபிரெஞ்சு விஞ்ஞானி ஃபிரான்சிஸ் பெர்ரின் இயற்கையான புதைப்படிவ அணு உலை ஒன்றைக் கண்டுபிடித்தார்.

இந்தக் கண்டுப்பிடிப்பையும், புவியிலுள்ள யுரேனியத்தில் 0.72% அளவுக்கு U235 என்கிற ஆபத்தான ஓரகத்தனிமம் (ஐசோடோப்) உள்ளதையும் சுட்டிக்காட்டி ‘மனிதரின் தோற்றத்துக்கு முன்பிருந்தே அணு உலைகள் இருந்து வந்துள்ளன’ எனக் குறிப்பிடும் சூழலியலாளர் ஜேம்ஸ் லவ்லாக் ‘இருப்பினும் தற்போதைய ஆபத்துக்களும் உண்மையானவையே’ என்பதை ஒப்புக்கொள்கிறார்.

தாழ்நிலைக் கழிவு, இடைநிலைக் கழிவு, உயர்நிலைக் கழிவு என அணுக்கழிவை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். அணு உலைக்குள் நிகழும் அணுப்பிளப்பின்போது பீட்டா, ஆல்பா, காமா என்கிற மூவகைக் கதிர்கள் உருவாகின்றன. இவை உலையின் ரியாக்டரில் உள்ள அணுக்கரு எரி உருளை எரிந்ததும் உருவாகுபவை.

எரிதல் எனும் சொல் ஓர் உருவகமே. உண்மையில் இதில் பயன்படும் எப்பொருளும் எரிவதில்லை அதாவது ‘ஆக்சிஜனேற்றம்’ அடைவதில்லை. மாறாக யுரேனிய உட்கருக்கள் பிளவுபட்டு நியூட்ரான்களை வெளியிடுகின்றன. அவை மற்ற யுரேனிய உட்கருக்களை மேலும் பிளவுபடத் தூண்டுகின்றன. இந்தத் தொடர் செயல்முறையில் சீசியம், அயோடின், ஸ்ட்ரான்சியம் போன்ற பல புதிய கதிர்வீச்சுத் தனிமங்கள் உருவாகின்றன.

எடுத்துக்காட்டாகப் புளூடோனியம்-241 (PU-241) என்பதை முன்வைத்து இவற்றைப் பார்ப்போம். PU-241 சிதைந்து அமெரிசியம்-241 (AM-241) உருவாகிறது. இது பீட்டா கதிர்வீச்சு. பிறகு AM-241 சிதைந்து நெப்டூனியம்-237 (NP-237) உருவாகிறது. இது ஆல்பா கதிர்வீச்சு. இந்த NP-237-ன் உட்கரு மீண்டும் மிகக் குறைந்த அலைநீளமுடைய மின்காந்தக் கதிர்வீச்சை உமிழ்கிறது.

இதுவே காமா கதிர்வீச்சு. ஆல்பா கதிர்வீச்சைத் தடுக்கக் காகிதம் போதும் என்பார்கள். பீட்டா கதிர்வீச்சை சில மி.மீ. பருமனுள்ள உலோகத் தகட்டால் தடுத்திடலாம். ஆனால், காமா கதிர்வீச்சு மிகுந்த பருமனுள்ள உலோகத்தைப் பயன்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது. இம்மூவகைக் கதிர்வீச்சுகளைக் கொண்ட பொருட்கள்தாம் கதிரியக்கக் கழிவுகள்.

பெயர்கள்தாம் வேறு

அமெரிக்காவிலும் சட்டப்படி கதிரியக்கக் கழிவு மூன்று வகையாகப் பிரிப்பட்டாலும், பெயர்கள் வேறுபடும்: தாழ்நிலைக் கழிவு, உயர்நிலைக் கழிவு, டிரான்ஸ்யுரேனிக் கழிவு. அணுமின் உலைகளிலிருந்து பெரும்பான்மையாகவும் ஆய்வுநிலையங்கள், மருத்துவமனைகளில் இருந்தும் சிறிதளவும் பெறப்படும் தாழ்நிலைக் கழிவு மூன்று உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.

100 ஆண்டுகளுக்குக் கதிர்வீச்சுத் தன்மை கொண்ட தாழ்நிலைக் கழிவு ‘கிளாஸ் ஏ’ கழிவு எனப்படும். இதுபோல் ‘கிளாஸ் பி’ கழிவு 300 ஆண்டுகளும், ‘கிளாஸ் சி’ கழிவு 500 ஆண்டுகளும் ஆயுளைக் கொண்டவை. இவற்றை ‘அமெரிக்க அணு ஒழுங்காற்று ஆணையம்’ குறைந்த அளவு ஆழத்தில் புதைத்து வைக்க அனுமதிக்கிறது. ஆனாலும் இவற்றை 500 ஆண்டுகாலம் பாதுகாக்க வேண்டும்.

நெதர்லாந்தின் லிஸின்ஜென்-ஊஸ்ட் எனுமிடத்தில் அணுக்கழிவை 300 ஆண்டுகளுக்குப் பாதுகாக்கும் அதிநவீன வைப்பகம் உள்ளது. 6.5 ரிக்டர் நிலநடுக்கத்தையும், 10 மீட்டர் உயர கடல் அலைகளைத் தாங்கக்கூடிய வகையில் இதன் வெளிச்சுவர் 1.7 மீட்டர் பருமன் உடையது. இதனுள்ளே 2,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கழிவு உள்ளது. கழிவுவைக் கண்ணாடியுடன் சேர்த்து உருக்கி அவற்றை உலோகக் கலனில் இட்டு மூடி, அக்கலனைச் சுற்றி கான்கிரீட் உறை போடப்பட்டுள்ளது.

உலோகக் கலனில் காற்றைவிட இலேசான ஹீலியம் வளி நிரப்பப்பட்டுள்ளது. கான்கிரீட் உறைக்குள்ளும் காற்றைவிடக் கனமான ஆர்கன் வளி நிரப்பப்பட்டுள்ளது. தகுந்த இடைவெளிகளில் ஆர்கான், ஹீலியம் ஆகியவற்றின் தடங்களை ஆய்வுசெய்து பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இவ்வளவு அதிநவீன வைப்பகத்தில் உடைந்த நிலையிலுள்ள கான்கிரீட் கழிவுக்கலனின் ஒளிப்படம் ‘ஜியோ’ இதழில் வெளியானபோது, இதன் நம்பகத்தன்மைக் கேள்விக்குள்ளானது.

இதே தாழ்நிலைக் கழிவு மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ள மற்றொரு நாடு ரஷ்யா. கடந்த 1957-ல் அணு உலை விபத்தால் ஏறக்குறைய 1,000 பேர் இறந்த ‘மயாக்’ நகரில்தான் இந்தக் கழிவு உள்ளது.

இங்குத் தாழ்நிலைக் கழிவுக்கலன்களின் ஒருபகுதி திறந்தவெளியிலேயே வைக்கப்பட்டுள்ளது. 1986-ல் செர்னோபில் விபத்தில் வெளியாகி வளிமண்டலத்தில் கலந்த கதிர்வீச்சைவிட, இரண்டரை மடங்கு அதிகமான கதிர்வீச்சு இங்கு வெளியாகி வருவதாக அதே ‘ஜியோ’ இதழ் தெரிவிக்கிறது.

ஒன்றும் செய்யாதா?

டிரான்ஸ்யுரேனிக் கழிவுவைச் சுருக்கமாக டி.ஆர்.யு. கழிவு என்கிறார்கள். (டிரான்ஸ்யுரேனிக் என்பது யுரேனியத்தின் அணு எண்ணான 92யைவிட அதிக அணு எண்களைக் கொண்டிருக்கும் AM-241, PU-238, PU-239, PU-240 உள்ளிட்ட தனிமங்களைக் குறிக்கின்றன). இவை தோலின் வழியாக உடலுள் ஊடுருவும் காமா கதிர்களை உமிழக்கூடியவை.

எனவே, இவற்றை லட்சக்கணக்கான ஆண்டுகள் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும். அமெரிக்கச் சட்டங்கள் நிலத்துக்குக்கீழ் குகைகளை அமைத்து, இவற்றைப் பாதுகாக்க வலியுறுத்துகின்றன. இது ஆழ்தள வைப்பகம் (DGR - Deep Geologic Repository) என்றழைக்கப்படும்.

தீர்ந்துபோன எரி உருளைகளிலும் புளூடோனியம்-239 என்கிற தனிமம் இருக்கும். இதன் கதிரியக்கம் காற்றில் ஒரு சில செ.மீ. தொலைவே பரவும் என்பதால், சிறு துண்டுத் துணியால் கட்டுப்படுத்திடலாம் என்பார்கள். ஆனால், ஒரு கிராம் அளவில்

பத்து லட்சத்தில் ஒருபகுதி நம் உடலில் நுழைந்தால்கூட நுரையீரல், கல்லீரல், எலும்புகளில் அது சேகரமாகி புற்றுநோயை வரவழைக்கும். முதல்கட்டக் கழிவிலிருந்து 10% புளூட்டோனியத்தை எரிபொருளாக மீட்கலாம். இவை ஆயுதங்களைத் தயாரிக்க உதவுகின்றன.

எனவே, இவற்றை உடனே புதைக்க மாட்டார்கள். ஒவ்வொரு டன் கழிவும் தோராயமாக 10 டன் புளூடோனியத்தைக் கொண்டுள்ளன. இத்துடன் ஒப்பிடுகையில் நாகசாகியில் இடப்பட்ட அணுகுண்டு வெறும் 6.2 கிலோ மட்டுமே எடையுள்ளது.

டி.ஆர்.யு. கழிவு மீண்டும் பயன்படுத்த இயலா நிலையை அடையும்போது அதை 400 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கலனுக்குள் வைத்துப் பாதுகாக்கவேண்டும். இவை வெப்பத்தை இழக்கப் பல பத்தாண்டுகள் ஆகும். அதுவரை இவை நிலமட்டத்துக்கு மேலாகக் காற்றோட்டமுள்ள கிடங்கில் சிறப்பு நகரும் கலனில் வைத்துப் பாதுகாக்கப்படும். இவ்வாறு குவிந்துவிட்ட கழிவைப் பாதுகாக்கும் பொருட்டு முன்னேறிய நாடுகள் தற்போது ஆழ்தள வைப்பகங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

பாதுகாப்பில்லா வைப்பகங்கள்

ஆழ்தள வைப்பகம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை 2002-ல் ஜெர்மானிய அறிவியலாளர்கள் வகுத்தனர். இது நிலமட்டத்திலிருந்து 300 மீட்டர் ஆழத்துக்குக் கீழும் அதேவேளை 1.5 கி.மீட்டர் ஆழத்துக்கு மிகாமலும் அமைய வேண்டும். இல்லையென்றால் வெப்பநிலை மட்டுமல்ல செலவுத் தொகையும் அதிகரித்துவிடும். இந்த நிலவறையின் பாறைக் குகைகள் குறைந்தது 100 மீட்டர் பருமன் உடையதாக இருக்க

வேண்டும். நிலத்தடி நீர் நொடிக்கு ஒரு மீட்டரில் 1,000 கோடியில் ஒரு பங்கு மட்டுமே ஊருருவும் வகையில் இருக்க வேண்டும். அதாவது ஒரு நீர் மூலக்கூறு (நீர்த்துளி அல்ல) ஒரு மீட்டர் தொலைவைக் கடக்க 317 ஆண்டுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். புவியின் ஆழத்தில் நடைபெறும் எரிமலை செயல்பாடு, அடியிலிருந்து புவிமேற்பரப்பு நோக்கி உயரும் வளிகளால் இப்படியோர் இடம் உலகில் இன்னும் கண்டுப் பிடிக்கப்படவே இல்லை.

உலகின் அனைத்து நிலத்தடிப் பாறைகளையும் ஆய்வுசெய்து ஆழ்தள வைப்பக நிலவறைக்கான நான்கு பாறை அமைப்புகளை ஆய்வாளர்கள் இறுதி செய்துள்ளனர். இருந்தாலும் இன்னமும் பொருத்தமான பாறையை நாம் கண்டுப்பிடிக்கவில்லை என்கிறார் ஸ்விஸ் ஒன்றிய அணுப் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் மார்கஸ் புஸர்.

எந்த நிலம் பாதுகாப்பானது?

முதலாவதாக உப்புப் பாறை அமைப்பு. இதன் உலர்த்தன்மை கதிரியக்கக் கழிவுகளின் பாதுகாப்புக்கு இன்றியமையாதது. அருகில் நீர் இல்லாதவரை இது வெப்பத்தைத் தாங்கக்கூடியதுதான். இப்பாறையின் பாதுகாப்பான பூச்சுத்தன்மை வெடிப்புகள் விரைவாக மூடிக்கொள்ள உறுதியளிப்பவை என்றாலும், இதன் நகரும் தன்மை தீங்கானது.

காரணம் உப்புக்குள் கலந்துள்ள பொருட்கள் அனைத்தும் இதனுடன் இணைந்தே நகரும். ஜெர்மனி தன் கழிவுகளுக்கு கோர்லெபென் (Gorleben) எனும் இடத்திலுள்ள உப்புபாறை அமைப்பைத் தேர்ந்தெடுத்தது. ஆனால் 2010-ல் அங்கு நடைமுறைக்கு வந்த புதிய பாதுகாப்பு விதிகள் அதை முடிவுக்குக் கொண்டுவந்தன. அது மூடப்பட்டாலும் குறைந்தது 500

ஆண்டுகளுக்குப் பழுதுநீக்க அணுகும் தன்மையுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு உப்புடன் கழிவு கலந்து, இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்று புஸர் எச்சரிக்கிறார்.

இரண்டாவது கிரானைட் பாறைகள். கடினமானதாக இருந்தாலும், அவை உடையும் தன்மை கொண்டவை. பாறைகளைப் பதமாக உடைக்கும் கருவிகள் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. துளையிட்டு அல்லது வெடிவைத்துதான் அவை தகர்க்கப்படுகின்றன.

இவற்றில் ஏற்படும் நுண் வெடிப்புகளின் வழியே நீர் எளிதாக ஊடுருவிவிடும். இவற்றை நாம் செயற்கைக் குகைச்சுவர்களில் காணமுடியும். எப்போது வேண்டுமானாலும் இப்படி ஊடுருவும் நிலத்தடிநீர் கதிர்வீச்சால் மாசடையும். பின்லாந்து, ஸ்வீடனின் வைப்பகங்கள் கிரானைட் பாறைகளின் மீதே அமைந்துள்ளன.

மூன்றாவதாகக் களிமண் பாறைகள். உப்புப்பாறையைவிடக் களிமண் பாறை சிறந்தது என்றாலும், எரிமலைப் பாறையைவிடக் கதிரியக்கத்தை உறிஞ்சக்கூடியது எனினும், இது வெப்பத்தைத் தாங்கக்கூடியது அல்ல. இதனுள் வைக்கப்படும் கழிவுக்கலன்களின் வெப்பம் 100 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கக் கூடாது.

தவிர இப்பாறையில் ஏற்படும் வெடிப்புகளும் ஆபத்தை வரவழைக்கும். பிரான்ஸ் நாட்டில் லொரெய்ன் குன்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹூடிலைன்கோர்ட் (Houdelaincourt) எனும் இடத்தின் களிமண் பாறை நிலவறைக்குள் அதிநவீன ‘ஆழ்தள வைப்பகம்’ ஒன்று கட்டப்பட்டுள்ளது. இப்பாறைகள் உடையும் தன்மைகொண்டவை என்பது ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளது. மேற்காகப் பாயும் நிலத்தடி நீர்ப்பின்னல் ஒன்று இவ்விடத்துக்கு வெகு அருகில் இருப்பதால், இதன் கதிர்வீச்சுப் பரவல் பல பத்தாண்டுகளுக்கு ஆராயப்பட வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

கைவிடப்பட்ட அமெரிக்கத் திட்டம்

இறுதியாக எரிமலை சாம்பல் பாறை (Tuff Rock). இவை கதிரியக்கம் ஊடுருவாத வகையில் தடுக்கக் கூடியது என்றாலும் நீரை ஸ்பாஞ்ச் போல் உறிஞ்சும் குறைபாட்டைக் கொண்டது. ஆனாலும் 1987-ல் ஐக்கிய அமெரிக்காவில் இப்பாறைகள் அமைந்த நெவாடாவின் யுக்கா மலைத்தொடர் ஆழ்தள வைப்பகமாகத் தேர்வு செய்யப்பட்டது. இது அந்நாட்டு ஆற்றல் துறையின் செல்லத் திட்டமாக வருணிக்கப்பட்டது.

வைப்பகத்தைக் கட்டுவதில் செலுத்திய ஆர்வத்தை அறிவியல்பூர்வமான ஆய்வு நடத்துவதில் அந்த அமைப்பு காட்டவில்லை. ஒரேயொரு கொள்கையின் அடிப்படையில் அதைக் கட்டத் தீர்மானித்தார்கள். அது அரசுக்குச் சொந்தமான முன்னாள் அணுவெடிப்புச் சோதனைப் பகுதி. அதனால் வேறு எந்த ஒப்புதலும் அவர்களுக்குத் தேவைப்படவில்லை.

யுக்கா மலைத்தொடர் திட்டம் ஒரு பேரழிவு என்று வருணிக்கிறார் ஜெர்மானிய புவி இயற்பியலாளரும் அணு உலை அமைந்த இடங்களின் பாதுகாப்பு வல்லுநருமான ஜெர்ஹார்ட் ஜென்ட்ஸ்ச். இந்த வைப்பகப் பகுதி இளம்நிலை எரிமலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் 600 சிறு நிலநடுக்கங்கள் இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 2007-ல் வைப்பகக் குளிர்க்குட்டை அமைந்த பகுதிக்கு நேர்கீழே பாதுகாப்பற்ற பகுதி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். கூடுதலாக நிலவறைப் பகுதியிலிருந்து ஒரு சுண்ணாம்புப் படிகக்கல்லும் கிடைத்தது. நீர் ஊடுருவிக் கலக்கும்போது மட்டுமே

உருவாகக்கூடியது அது. தொடங்கப்பட்ட நேரத்தில் மிகவும் பாதுகாப்பானது என்றும் பிறநாடுகளும் பின்பற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், 2009 ஜூலையில் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்டது. அதற்குள் 1,500 கோடி டாலர்வரை அதற்குச் செலவாகி இருந்தது.

புவியியல் அடிப்படையில் அமையாத ஸ்காண்டிநேவியன் திட்டத்தின்படி, அணுக்கழிவை நீண்டகாலம் பாதுகாப்பாக வைக்க முடியும் என்றனர். அது தாமிரக் குப்பிகளின் (கேனிஸ்டர்) அடிப்படையில் திட்டமிடப்பட்டது. இருந்தாலும் ஈரப்பதம் போன்ற இயற்கைக் காரணிகளால் எதிர்பார்த்ததைவிடச் சீக்கிரம் அவை அரிப்புக்குள்ளாகும் எனத் தெரியவந்தது. மொத்தத்தில் வைப்பகத் திட்டங்கள் கழிவுகளோடு பெரிய கேள்விக்குறிகளையும் தம்முடன் கொண்டுள்ளன.

(அடுத்த வாரம் நிறைவடையும்)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்

தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x