Last Updated : 31 Mar, 2018 11:35 AM

 

Published : 31 Mar 2018 11:35 AM
Last Updated : 31 Mar 2018 11:35 AM

விவசாயக் கடன்: படங்களாக மட்டும் உறைந்துவிட்டவர்கள்!

வி

வசாயி என்றால் மக்களுக்கு உணவு அளிப்பவர் என்றிருந்த நிலை மாறி, இன்றைக்கு விவசாயி என்றாலே தற்கொலைதான் ஞாபகத்துக்கு வருகிறது. இந்தியாவில் 1997-ம் ஆண்டு முதல் தற்போதுவரை சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை அதிகம் நிகழும் மாநிலங்களாக மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகம், மத்தியப்பிரதேசம் ஆகியவை உள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகமும் சேர்ந்துவிட்டது, வேதனை!

மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் கடந்த இரண்டாண்டுகளில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தப் பின்னணியில் ஒளிப்படக் கலைஞரும் திரைப்பட இயக்குநருமான விஜய் எஸ்.ஜோதா, தெலங்கானா-ஆந்திராவில் விவசாயக் கடனைச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பத்தினர் குறித்த ஒளிப்பட ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள இந்தியா இண்டர்நேஷனல் மையத்தில் ‘முதல் சாட்சி’ (The First Witness) என்ற தலைப்பில் இந்த ஒளிப்படக் கண்காட்சி, சமீபத்தில் நடைபெற்றது. மகாராஷ்டிர விவசாயிகளின் ‘நீண்ட பேரணி’யையொட்டி இந்த ஒளிப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கண்காட்சியில், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் ஒளிப்படத்தை அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கையில் ஏந்தியபடி உள்ளனர். தற்கொலை செய்துகொண்ட இந்த விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய இறப்புக்குப் பிறகாவது, தங்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கையுடன் தற்கொலை செய்துகொண்டவர்கள். ஆனால் பரிதாபம்... அவர்களின் நம்பிக்கை பொய்த்துவிட்டது. அவர்களது குடும்ப நிலைமை முன்பைவிட மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது.

 

31CHLRD__VIJAY_S_JODHA_ விஜய் ஜோதா

“இந்த ஒளிப்படத்தில் கணவர்களை இழந்த ஏழு பெண்களும், தந்தையை இழந்த ஒரு பெண்ணும், மனைவியை இழந்த ஒரு கணவரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களை ஒளிப்படம் எடுக்கும்போது என்னுடைய கேமராவை அவர்களின் முகத்துக்கு நேராக வைக்காமல், சாய்வான கோணத்தில் வைத்துப் படம் எடுத்தேன்.

ஏற்கெனவே கஷ்டத்தில் இருக்கும் அவர்கள், ஒளிப்படம் எடுப்பதால் மேலும் வேதனைப்படக் கூடாது இல்லையா, அதற்காகத்தான்” என்கிறார் விஜய்.

மற்றவர்களின் பசியாற உழைக்கும் விவசாயிகளின் இந்தப் படங்களைப் பார்க்கும்போது, நமக்குச் சோறு இயல்பாக இறங்க வாய்ப்பில்லை!

நன்றி: பிளிங்க் (பிசினஸ் லைன் இணைப்பிதழ்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x