Published : 03 Mar 2018 01:05 PM
Last Updated : 03 Mar 2018 01:05 PM
வீ
டுகளில் வலம் வரும் சாதாரணப் பல்லியைப் பார்த்தே பலர் பயந்து ஓடும் நிலையில், ஆள் நீள முதலைகள் முதல் நஞ்சுள்ள பாம்புகள்வரை துணிச்சலோடு கையாளுகிறார் பிண்டி இர்வின். காட்டுயிர்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத காலகட்டத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் காட்டுக்குச் சென்று காட்டில் வாழும் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்தும், அவற்றின் முக்கியத்துவம் குறித்து ‘க்ரோக்கடைல் ஹன்ட்டர்’ என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் ஸ்டீவ் இர்வின். அவருடைய மகள்தான் பிண்டி இர்வின்.
எட்டு வயதில் ஆர்வம்
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து நகரில் ஸ்டீவ் இர்வினின் பெற்றோர் உருவாக்கிய ஆஸ்திரேலிய காட்டுயிர் சரணாலயத்தில் உள்ள உயிரினங்களைத் தற்போது பிண்டி இர்வின்தான் பராமரித்துவருகிறார். பொதுவாகக் குழந்தைகள் பொம்மைகளுடன் வளர்வதுபோல் பிண்டி சிறுவயதிலிருந்தே உயிரினங்களோடு வளர்ந்தவர்.
தந்தை ஸ்டீவ் உடன் இணைந்து எட்டு வயதிலேயே சிறு முதலைகள், பாம்பு, உடும்பு போன்ற உயிரினங்களைக் கையாளப் பழகியுள்ளார் பிண்டி. அதேபோல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பிரசாரத்திலும் ஈடுபட்டுவருகிறார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு வழங்கப்படும் ‘ஆஸ்திரேலிய ஜியாகிரஃபிக் சொஸைட்டியின் இளம் பாதுகாவலர்’ என்ற உயரிய விருதை 2014-ல் பிண்டி வென்றார்.
சமீபத்தில் தனது தந்தையின் பழைய வீடியோ பேட்டி ஒன்றை பிண்டி இர்வின் பார்த்துள்ளார். அதில் தன்னுடைய வாரிசுகள் எதிர்காலத்தில் காட்டுயிர்ப் பாதுகாப்புப் பணிகளிலும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பிரசாரத்திலும் ஈடுபட்டால் அதுவே தன்னுடைய வாழ்நாள் சாதனையாகக் கருதுவதாக ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.
“இந்த வீடியோ பதிவை சில நாட்களுக்கு முன்புதான் பார்த்தேன். இதில் என்னுடைய அப்பா எங்களைப் பற்றிக் கூறியிருக்கும் விஷயங்கள், என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவையாக உள்ளன. என் அப்பாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக நானும் காட்டுயிர்ப் பாதுகாப்பு குறித்துச் சிறப்பாகப் பணியாற்றுவேன். என் அப்பா ஒரு சூப்பர் ஹீரோ” என தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பிண்டி பகிர்ந்துள்ளார்.
ஆபத்தான கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காகப் படமெடுத்துக் கொண்டிருந்தபோது மார்பில் திருக்கை மீன் கொட்டியதில் 2006-ம் ஆண்டு ஸ்டீவ் காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர் அவருடைய குடும்பத்தினர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகளவில் கலந்துகொள்ளாமல் இருந்தனர்.
இந்நிலையில் ‘அனிமல் பிளேனட்’ அலைவரிசையில் பத்து ஆண்டுகள் கழித்து இர்வின் குடும்பத்தினர் மீண்டும் நிகழ்ச்சிகளை நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் காட்டுயிர்ப்பாதுகாப்பு குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்று இர்வின் குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தந்தை விட்டுச் சென்ற ‘க்ரோக்கடைல் டைரீஸ்’-ன் மிச்சப் பக்கங்களை உங்கள் சாதனைகளால் நிரப்புங்கள் பிண்டி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT