Published : 27 Apr 2019 12:11 PM
Last Updated : 27 Apr 2019 12:11 PM

படிப்போம் பகிர்வோம்: வேலூர் நதி கொல்லப்பட்ட கதை

‘பசுமை வழிச் சாலை' என்ற பெயரில் பசுமையை முழுமையாகத் துடைத்தழிக்கும் சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை ஆளும் அ.தி.மு.க. ஆட்சியும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சியும் கடந்த ஆண்டு கோலாகலமாக அறிவித்தன.

அப்போது சம்பந்தப்பட்ட ஊர்க்காரர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலரும் மட்டுமே இத்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள். நிகழவுள்ள இந்த இயற்கைப் பேரழிவு குறித்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பெரிய சலனமோ எதிர்ப்போ வெளிப்படவில்லை.

எவ்வளவு பெரிய சுற்றுச்சூழல் சீரழிவு கண் முன்னே அரங்கேறினாலும், நாம் எப்படி எந்த அக்கறையுமின்றி இருக்கிறோம் என்பதற்கு இந்தப் பிரச்சினை ஓர் எடுத்துக்காட்டு. 50 ஆண்டுகளுக்கு முன்னால் வடஆர்க்காட்டின் ஒரு பகுதி இதேபோல் கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறது.

அப்போதும் இன்றைக்கு உள்ளதைப் போன்ற ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், அக்கறையற்ற மற்ற பகுதி மக்கள்தாம் இருந்திருக்கிறார்கள். கவிப்பித்தன் எழுதிய 'நீவா நதி' நாவலைப் படித்தவுடன் மனதில் நிழலாடும் சித்திரம் இதுதான்.

தொழிற்சாலைகள்தான் வளர்ச்சியைத் தரும், வேலையைத் தரும் என்ற பொய் பல ஆண்டுகளாக நம் நாட்டில் காடு, மலை, மேடெல்லாம் சுற்றிச் சுற்றி வருகிறது. உலகமயமாக்கத்துக்குப் பின் அந்தப் பொய்களும் அழிவும் தீவிரமடைந்திருக்கின்றன.

'வளர்ச்சித் திட்டங்கள்' என்ற பெயரில் ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் சாதாரண மக்களின் தலையில் நெருக்கடிகளைச் சுமத்திவிட்டு, அவர்கள் சம்பாதித்துக்கொண்டு போய்விடுகிறார்கள். அரசு நிர்வாகம், ஊழியர்கள் மூலம் முதலாளிகளுக்கு சட்டபூர்வமாக இடத்தைக் காபந்து செய்துதரும் தரகு வேலையையே ஆட்சியாளர்கள் செய்து வருகிறார்கள்.

பொன்னை தெரியுமா?

பொன்னி நதி (காவிரி), பொருநை (தாமிரபரணி) போன்ற ஆறுகள் குறித்து நமக்குத் தெரியும். ஆனால், பொன்னை எனப்பட்ட நீவா நதியைத் தெரியாது. நம் கண் முன்னே அந்த ஆறு அழிக்கப்பட்டபோது ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகளே அலட்சியமாக இருந்த நிலையில் மக்களுக்கு மட்டும் எப்படித் தெரிந்துவிடப் போகிறது.

வடஆர்க்காடு மாவட்ட சம்சாரிகளுக்கு (உழவர்கள்) வாழ்வாதாரமாக இருந்த பொன்னை நதியைச் சார்ந்திருக்கும் கிராமங்களில் 50-60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடக்கிறது இந்த நாவலின் கதை.

பொதுவாக வளர்ச்சி பெறாத காலமாக அடையாளப்படுத்தப்படும் அந்தக் கால மக்களின் நிலைமையைப் பார்க்கும்போது, இன்றைய காலத்தைவிட நிச்சயமாக பல வகைகளில் அது மேம்பட்டே இருந்திருக்கிறது என்று அடித்துச் சொல்லலாம்.

பொதுவாக வாழ்ந்து கெட்டவர்களின் சரிவும் ஒரு பெரிய குடும்பத்தின் வீழ்ச்சியும் நாவல்களில் அதிகம் பேசப்பட்டு வந்துள்ளன. வடஆர்க்காடு பகுதி சம்சாரிகளின் ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதன் கதை.

குலைத்துப் போடும் அரசு

பொன்னை நதியிலிருந்து உழவர்களே தங்களுக்குத் தேவையான தண்ணீரைக் கடும் உழைப்பைச் செலுத்தித் திருப்பி, ஆண்டுக்கு மூன்று போகம் விளைச்சல் எடுத்து தற்சார்புடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இதைத் தகர்த்தெறிவது போல் 'சிப்காட் தொழில் வளாகம்' என்ற பெயரில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைநிலத்தை அரசு கையகப்படுத்தும்போது, அந்த சம்சாரிகளின் வாழ்க்கை 'ஒரு கனாக் கால'மாகச் சட்டென்று கடந்துவிடுகிறது.

முதலில் பெல் எனப்படும் பி.ஹெச்.இ.எல். நிறுவனம், தொடர்ந்து அது சார்ந்த தனியார் நிறுவனங்களும் தோல் தொழிற்சாலைகளும் ஒவ்வொரு கிராமத்திலும் தங்கள் கால்களை ஆழமாக ஊன்றுகின்றன. நிலம் கொடுப்பவர்களுக்கு அரசு வேலை என்ற வாக்குறுதியை நம்பிப் பலரும் நிலத்தைக் கொடுக்கிறார்கள். ஆனால், கிடைப்பதென்னவோ பியூன் வேலைதான். தனியார் நிறுவனங்களிலோ அதுவும் கிடையாது.

தங்கள் குடும்பத்தையும் கிராமத்தையும் சுயசார்புடன் நகர்த்தி வந்த சம்சாரிகளின் வாழ்க்கையைத் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் குலைத்துப் போடுகிறது அரசு. மற்றொருபுறம் கையகப்படுத்தப்பட்ட நிலமும் பல ஆண்டுகளாக பயன்படுத்தப் படுவதில்லை.

தினமும் தாங்கள் உருண்டு புரண்ட நிலத்தைத் தினசரி மனம் வெம்பிப் பார்க்கிறார்கள் உழவர்கள். இது போதாது என்று மிச்சமிருக்கும் வயல்களுக்கான தண்ணீரும் ஆந்திர அரசு கட்டும் அணையால் பறிபோகிறது.

அழிவுகள் மாறுவதில்லை

அரசு கொடுக்கும் நெருக்கடிகள், அலையவிடுதல், நிலம் - கிணறு போன்ற இயற்கை வளங்களின் பண மதிப்பைக் குறைத்து மதிப்பிடுதல், கூடுதல் இழப்பீடு கேட்பவர்களை நீதிமன்றம் வழியாக அலைக்கழித்தல் என நிலம் கையகப்படுத்துவதில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் கடந்த 50 ஆண்டுகளாக மாறாமல்தான் உள்ளன என்பதை நாவலைப் படிக்கும்போது உணர முடிகிறது.

வேலூர் மாவட்ட உழவர்களின் பிரச்சினைகள்; உழவர்களின் நீர்ப் பாசனம் - நீர் சேகரிப்பு; ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், அவற்றுடனான மனிதர்களின் உறவு ஆகியவற்றைப் பற்றி இந்த நாவல் விரிவாகப் பேசியுள்ளது.

தொழில் வளர்ச்சி மிகுந்ததாகப் பறைசாற்றிக்கொள்ளும் வேலூர் மாவட்டத்தில் புற்றுநோய், தோல் நோய்களின் தாக்கம் மற்ற பகுதிகளைவிட அதிகமாக இருப்பதும், வாழ்வாதாரம் இழந்த மக்கள் கூலி வேலை தேடி பெங்களூர் போன்ற ஊர்களில் அந்தக் காலத்திலேயே இடம்பெயரும் துயரமும் பதிவாகியுள்ளன.

எப்போது மௌனம் கலையும்?

கதையின் தொடக்கத்திலும் முடிவிலும் எட்டிப் பார்க்கிறது ‘மணல்செரா’ என்ற சல்லடை. ஓடும் தண்ணீரிலிருந்து மணலை மட்டும் வரித்து எடுக்கப் பயன்படும் கருவி இது.

ரு காலத்தில் உழவர்கள் தடுப்பணை கட்டுவதற்கு உதவிய மணல்செரா, வெள்ளமும் மழையும் பொய்த்துப் போகும் நிலையில் அர்த்தமிழந்து போகிறது.

10 ஆண்டுகளுக்கு மேல் வேலையில்லாமல் போகும் மணல்செரா பேருருவம் எடுத்ததுபோல, அந்த ஊர் மக்களின் வாழ்க்கையிலும் பெரிய பெரிய ஓட்டைகள் விழுகின்றன.

தண்ணீர் இன்றி உணவோ வாழ்க்கையோ இல்லை. ஆனால், அது நம்மிடமிருந்து முழுமையாகப் பறிக்கப்படும்வரை, அதை நாம் உணர்வதில்லை.

இப்படித் தண்ணீரையும் விளைநிலத்தையும் பறிக்கும் வேலையை அரசே செய்யும்போது, எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வாதாரமும் சேர்த்தே நசுக்கப்படுவதை பேசா மடைந்தகளாகப் பார்த்துக் கடக்கிறோம்.

வரலாறு திரும்பத் திரும்ப ஒரே மாதிரித்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதை எந்த உணர்ச்சியுமற்று வெறுமனே கடந்து செல்லும் சாட்சிகளாக இன்னும் எத்தனை காலத்துக்கு இருக்கப் போகிறோம்?

நீவா நதி,

கவிப்பித்தன்,

என்.சி.பி.எச். வெளியீடு,

தொடர்புக்கு: 044-26251968

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x