Published : 20 Apr 2019 12:46 PM
Last Updated : 20 Apr 2019 12:46 PM
உலகப் புத்தக நாள் ஏப்ரல். 23
இந்தியக் காடுகளில் இருந்து பழங்குடிகளை வெளியேற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றம் பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது. காடுகளின் குழந்தைகளான பூர்வகுடிகளைப் பற்றி நமது அரசும் நீதித்துறையும் வெகுமக்களும் எப்படி எந்த அடிப்படைப் புரிதலையும் கொண்டிருக்கவில்லை; ஏன் சில சுற்றுச்சூழல் அறிஞர்களின் புரிதல்கூட இது சார்ந்து பெரும் குறைபாடு கொண்டதாக இருக்கிறது என்பதை இந்த உத்தரவிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
பழங்குடிகள் குறித்த நமது பார்வை மேற்கத்தியப் பின்புலத்தில் இருந்து வரித்துக்கொண்டதாகவே உள்ளது. மாறாகக் கிழக்கு நாடுகளின் அறிவு என்பது வெறும் புத்தகங்களில் வடிக்கப்பட்டதல்ல. பல்வேறு திசைகளிலும், திரும்பத் திரும்பவும் பாய்ந்த காரணத்தாலேயே உருவான ஆறுகளின் தடங்களைப் போல், மூளையில் பதிக்கப்பட்ட வலுவான தடம் அது.
பட்டறிவாக, மரபு அறிவாக அது பரிணமித்துள்ளது. பொதுவாக நாம், அந்தத் தடங்களை அவற்றின் இயல்புடன் புரிந்துகொள்ள முயலாமல், மேற்கத்திய புத்தக அறிவைக் கொண்டு உரசிப் பார்க்கவே விரும்புகிறோம்.
பழங்குடி வழக்காறு
தாவரங்கள், உயிரினங்கள், காடுகள், கடல் போன்றவற்றைப் பற்றி எத்தனையோ அறிவியல் ஆராய்ச்சிகள், ஆய்வுக் கட்டுரைகள் வந்திருக்கலாம். ஆனால், அவை எல்லாவற்றையும் தாண்டி ஒவ்வொரு முறையும் காட்டையோ உயிரினத்தையோ நாடிச் செல்லும்போது, ஒருவருக்குக் கிடைக்கும் அனுபவமும் புரிதலும் முற்றிலும் புதிதானவையாக இருக்கக்கூடும்.
ஒரு காட்டைப் பற்றி, ஓர் உயிரினத்தைப் பற்றி என்னதான் முன்கணிப்புகளைக் கொண்டிருந்தாலும், ஏதோ ஓர் அம்சம் அன்றைக்குப் புதிதாகத் தோன்றலாம். வெறும் முன்கணிப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு காட்டுக்குள் புகுந்து யாரும் வெளியே வந்துவிட முடியாது. வலுவான பட்டறிவும் சமயோசித ஆற்றலும் ஒரு புள்ளியில் முயங்கிச் செயல்பட வேண்டும். இதுதான் காடுகளும் கடல்களும் காலம்காலமாக நமக்கு மௌனமாகக் கற்றுக்கொடுக்கும் செய்தி.
இந்த மரபு அறிவைக் கீழானதாக, பயனற்றதாகக் கருதும் போக்கிலிருந்து மாறுபட்டு, காடுகளைக் குறித்த காடர்களின் பார்வையை - அவர்களுடைய வாய்மொழி வழக்காற்றை ‘நாங்கள் நடந்து அறிந்த காடு’ என்ற புத்தகம் மூலமாகப் பதிவுசெய்திருக்கிறார்கள் இளம் இயற்கை ஆய்வாளர்கள் மாதுரி ரமேஷும் மணிஷ் சாண்டியும். ‘தாரா’ பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் சிறுகதைகளைப் போல் உள்ளன.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தைத் தமிழில் தந்துள்ளவர் பிரபல மொழிபெயர்ப்பாளர் வ. கீதா. அனுபவித்து வாசிக்க வைக்கும் சரளமான மொழிபெயர்ப்பு. நூலின் மொழிநடையும் உள்ளடக்கத்தை ஆசிரியர்கள் கட்டமைத்துள்ள விதமும் இப்புத்தகத்தின் வாசிப்புத் தரத்தைத் தனித்துவம் ஆக்கியிருக்கின்றன.
எழுத்தாலும், அதன் ஆழத்தாலும் மட்டுமே ஒரு புத்தகத்தை அளக்கும், முன்வைக்கும் போக்கு தமிழ்ப் பதிப்புலகில் உள்ளது. ஆனால், ஒவ்வொரு புத்தகத்தையும் ஒரு கலைப் படைப்பாக மாற்றும் தன்மை கொண்ட ‘தாரா’ பதிப்பகத்தின் இந்தப் புத்தகத்தை, அதில் இடம்பெற்றுள்ள ஓவியங்களுக்காக மட்டும் தனியாக ஒரு முறை புரட்டிப் பார்க்கலாம். காடர்கள், காடுகள் குறித்த நமது மனப்புனைவுகளுக்கு லண்டனைச் சேர்ந்த மாத்யு ஃபிரேமின் ஓவியங்கள் புது வண்ணம் சேர்க்கின்றன.
மதியப்பனின் கதைகள்
அவர்களுடைய பெயரே சுட்டுவது போல் காடுகளைச் சார்ந்தவர்கள் காடர்கள். காடுகளுக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவைக் குறித்த அழுத்தமானதொரு ஆவணமாக இந்தப் புத்தகம் திகழ்கிறது. காடுகளுக்குள் நடந்துசெல்வது என்பது, காடர்களின் தொன்றுதொட்டதொரு பழக்கம்.
இப்படி நடந்துசெல்லும் பாதைகள், கடந்துசெல்லும் இடங்கள் ஒவ்வொன்றைக் குறித்தும் அவர்களிடம் ஒரு கதையோ சம்பவமோ பாடலோ இருக்கிறது. எல்லாக் கதைகளின் அடியோட்டமும் காட்டுயிர்கள், ஆட்கள், ஆன்மா ஆகியவற்றோடு அவர்கள் கொண்டுள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது.
இந்தப் புத்தகத்தின் பல அத்தியாயங்களில் நிறைந்திருப்பவர் மதியப்பன். பெயருக்கேற்ற மதி நிறைந்தவர். ஒருவர் பயன்படுத்தும் பாதையைக் கொண்டே அவர் எந்தப் பழங்குடி என்று சொல்லிவிட முடியும்; ஒரு காட்டுப் பாதை அனைத்துப் பருவ காலங்களிலும் ஒன்று போலவே இருக்காது; காட்டில் காணப்படும் வெவ்வேறு வகையான மணங்கள் எப்படியிருக்கும் என்பது குறித்தெல்லாம் பேசும்போது, காட்டைப் பற்றி ஒரு வெளிநபர் வைத்திருக்கும் அனைத்துப் பிம்பங்களையும் தன் அனுபவ அறிவால் கலைத்துப் போடுகிறார். ஒவ்வொன்றைப் பற்றியும் அவர் விவரிக்கும்போது வியப்பில் வாய்பிளக்கிறோம்.
காடர் வழங்கும் பெயர்கள்
காடுகள்-காட்டுயிர்கள்-காடர்கள் இடையிலான பிரிக்கவே முடியாத பிணைப்பு, பட்டை தீ்ட்டப்பட்ட அவர்களுடைய மரபு அறிவு, இயற்கையை-தன் சுற்றுப்புறத்தை எப்படி உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதைச் செதுக்கும் அவர்களுடைய பழங்குடி அறம்-மதிப்பீடுகள் போன்ற அனைத்தையும் இந்தப் புத்தகத்தை வாசிப்பதன் மூலம் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.
ஈர்ப்பு நிறைந்த இந்தக் கதைகளையும் மரபு அறிவையும் பதிவுசெய்துள்ள இந்தப் புத்தகம், மற்றொரு முக்கியமான வேலையையும் செய்துள்ளது. அது காட்டுயிர்களுக்குக் காடர் பழங்குடிகள் வழங்கும் பெயர்கள். செட்டிக் குரங்கு-சிங்கவால் குரங்கு (சோலை மந்தி), மலையணில் - வெண்க, ருத்திராட்ச மரம் - நகர மரம், ஓங்கல் - இருவாச்சி, கூரன் - சருகுமான், முதியர் பறவை - சீகாரப் பூங்குருவி; இப்படிப் பல பெயர்கள் பதிவாகியுள்ளன.
ஏன் நன்றி சொல்கிறேன்?
நூலின் ஓரிடத்தில் மதியப்பன் இப்படிச் சொல்கிறார்: “காட்டுக்குப் போகும்போதும் சரி, காட்டைவிட்டு நீங்கும் போதும் சரி, என்னைப் போன்ற பழைய ஆட்கள் காட்டுக்கு நன்றி சொல்லிவிட்டுத்தான் எங்களுடைய பயணத்தைத் தொடங்குவோம். காட்டை விட்டு நீங்குகையில் முதியர் பறவைக்கு நன்றி தெரிவிப்போம் - எங்கள் மூதாதையராக இருந்து எங்களைப் பாதுகாத்துக் கூட்டி வந்ததற்காக, எங்களுக்கு உணவளித்ததற்காகக் காட்டுக்கு நன்றி சொல்வோம்."
ஏன் வெளியாட்களால், வறட்டு அறிவியலால், ஆய்வாளர்களால் மட்டும் காடுகளையோ காட்டுயிர்களையோ காப்பாற்றிவிட முடியாது என்பதற்கு இந்த ஒரு கூற்று சிறந்த உதாரணம்.
இயற்கையோடு ஒன்றிப்போய் வாழ்வது பழங்குடிகளுக்குக் கை வந்த கலை. நாமெல்லாம் இயற்கையிலிருந்து பிய்த்துக்கொண்டு வந்துவிட்டோம். அவர்கள் மனிதர்களாகிவிட்ட பின்பும் இயற்கையைத் தங்களிடமிருந்து பிய்த்தெறியாதவர்களாக, அதன் ஓர் அணுவாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
கட்டுரையாளர்,
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT