Last Updated : 13 Apr, 2019 01:09 PM

 

Published : 13 Apr 2019 01:09 PM
Last Updated : 13 Apr 2019 01:09 PM

தீராத சுற்றுச்சூழல் சர்ச்சைகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறது. இவற்றில் பலவும் மத்திய அரசு சார்ந்தவை. அந்த சர்ச்சைகள் குறித்து ஒரு பார்வை:

தொடரும் ஹைட்ரோகார்பன்

தொடக்கத்தில் மீத்தேன் திட்டம் என்ற பெயரில் காவிரிப் படுகையில் எரிபொருள் எடுக்கும் முயற்சி தொடங்கியது. நம்மாழ்வார் உட்படப் பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்ததால், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முயன்ற தனியார் நிறுவனம் வெளியேறியது.

அடுத்ததாக நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட திட்டத்துக்கும் மக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இந்தத் திட்டம் திரும்பப் பெறப்படுவது பற்றித் திட்டவட்டமான எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திவந்த வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களில் ஈடுபட மத்திய அரசுடன் கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதற்காக 6,000 சதுர கிலோ மீட்டர் பரப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்றுவரும் உழவு இத்திட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பது எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் நிலைப்பாடு.

ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எரிபொருள் திட்டங்கள் கைவிடப்பட்டு ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் பொருளாதார மண்டலமாக’ இப்பகுதியை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கேட்பாரின்றிக் கிடக்கிறது.

முடிவுறாத ஸ்டெர்லைட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது.

இந்த ஆலையைத் திறக்க வேண்டும் என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் 2019 பிப்ரவரியில் தடை விதித்தது. அதேநேரம் மாநில நீதிமன்றங்களில் வழங்குத் தொடர்ந்து ஆலையைத் திறப்பது குறித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக உருவான கலவரத்தைத் தூண்டியது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அல்ல என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்ட சுற்றுச்சூழல் செயற்பாட்டளர் முகிலன், அதற்குப் பிறகு காணாமல் போனார். அவர் திரும்பாமல் இருப்பதும் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

தட்டுத் தடுமாறும் கூடங்குளம்

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை மக்களின் போராட்டம் வேறு வேறு வகைகளில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. எதிர்ப்பை மீறி

2016-ம் ஆண்டு இந்த அணு உலை திறக்கப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 4, 5, 6, 7, 8 ஆகிய புதிய அணு உலைகளுடன் கூடங்குளத்தில் அணு உலைப் பூங்கா அமைப்பதற்கு ரஷ்ய அரசுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. கூடங்குளம் சார்ந்த பிரச்சினைகளும் தொடர்ந்துகொண்டுள்ளன.

நியூட்ரினோ தடை

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் அம்பரப்பர் மலை உள்ளது. இம்மலையில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக மலையைக் குடைந்தால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என எதிர்ப்பு உருவானது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தத் திட்டத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்கியது. அதேநேரம், இத்திட்டத்துக்குத் தேசிய வனவிலங்கு வாரிய அனுமதியைப் பெறும்வரை நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

இனயம் துறைமுகம்

கேரளத்தின் விழிஞ்ஞத்தில் அதானி நிறுவனம் தனியார் சரக்குத் துறைமுகத்தை கட்டிவருகிறது. இந்தப் பின்னணியில், அங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் தமிழகத்தின் குளச்சல் அருகே இனயத்தில் மற்றொரு சரக்குத் துறைமுகம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

சுமார் 1,830 ஏக்கர் பரப்பளவுள்ள இந்தத் துறைமுகத்தாலும் அதை ஒட்டிய கட்டுமானச் செயல்பாடுகளுக்கும் பெரும் எண்ணிக்கையில் மீனவ மக்கள் வெளியேற்றப்படுவார்கள். சுற்றுச்சூழல் தாக்கங்களும் ஏற்படும் என்று வலியுறுத்தி, இந்தத் துறைமுகத்துக்கு எதிராக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேற்கண்டவை எல்லாம் இன்னும் முடிவுறாத சுற்றுச்சூழல் பிரச்சினைகளாக உள்ளன. அதேநேரம் ஏற்கெனவே நிகழ்ந்து முடிந்துவிட்ட இரண்டு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியதையும் மறக்க முடியாது.

எண்ணெய் வாளி

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே, எம்.டி. பி.டபிள்யு. மேப்பிள், எம்.டி. டான் காஞ்சிபுரம் என்ற இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதில் கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியது.

கடலில் கொட்டிய எண்ணெய்யை எப்படி அகற்றுவது என்று தெரியாமல் காமராஜர் துறைமுக நிர்வாகம் கையைப் பிசைந்துகொண்டு நின்றதால், கல்பாக்கம்வரை எண்ணெய்க் கசிவு பரவியது. அதை முறைப்படி அகற்ற அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் தன்னார்வலர்களைக்கொண்டு வாளியில் அள்ளியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோல் ‘ஓகி’ புயலுக்கு முன்பு ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற சுமார்

400-க்கும் அதிகமான கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களைக் கண்டுபிடிப்பதில் அரசு மெத்தனம் காட்டியதாக எழுந்த விமர்சனம், குமரியைக் கொந்தளிக்க வைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x