Last Updated : 02 Mar, 2019 11:44 AM

 

Published : 02 Mar 2019 11:44 AM
Last Updated : 02 Mar 2019 11:44 AM

பற்றி எரிந்த காடு

புலிகள் சரணாலயத்தையும் தேசியாப் பூங்காவையும் உள்ளடக்கியிருக்கும் கர்நாடகத்தின் பந்திபூர் காட்டுப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க 5 நாட்களுக்கும் மேலாக கர்நாடக வனத்துறையினர் போராடினர், நிலைமை மிகவும் கவலையளித்ததாக, ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் ரிமோட் சென்சிங் செண்டர் (என்.ஆர்.சி.சி) தெரிவித்தது. என்.ஆர்.சி.சி. அறிக்கையின்படி, 15,450 ஹெக்டேர் காட்டுப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

எரிந்து கொண்டிருக்கும் இந்த பந்திபூர் காடும், கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் பரவியிருக்கும் அந்தக் காட்டின் நீட்சியும்தான் யானைகள், சிறுத்தைகள், புலிகள் உள்ளிட்ட நமது நாட்டின் காட்டுயிர்கள் பலவற்றுக்கும் முக்கிய சரணாலயமாக உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலைப் புலிகள் சரணாலயத்தில் ஏற்பட்ட தீயால், நான்கு நாட்களில் 250 ஏக்கருக்கும் மேலான வனப் பகுதி பாதிப்புக்கு உள்ளானது. ஆனால், முதுமலையில் காட்டுத் தீயை விரைவில் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பந்திபூர் தீ விபத்து எதனால் ஏற்பட்டது?

இயற்கையாகவே, பந்திபூர் தீ விபத்துக்கு உள்ளாகும் காடு கிடையாது. அங்கு உள்ள மரங்கள் கடினமானவை அல்ல. காற்றும் அங்கு வறட்சியற்று, ஈரப்பதத்துடனேயே காணப்படும். இதனால், மரங்களின் உராய்வாலும் வறண்ட காற்றாலும் தீப்பற்றவோ தரையில் வீழ்ந்திருக்கும் சருகுகள் பற்றிப் பெரும் காட்டுத் தீயாக மாறவோ அங்கு வாய்ப்பில்லை.

தென் இந்திய காட்டுப் பகுதியில் ஏற்படும் தீ விபத்துகள் எல்லாம் மனிதர்களால் ஏற்பட்டவையே. அது தெரியாமல் ஏற்பட்ட விபத்தா வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டதா என்பதுதான் கேள்வி. இந்த பந்திபூர் காட்டுத் தீயை ‘திட்டமிட்ட ஒன்று’ என்று கர்நாடக அரசு முதன்மை வனக் காப்பாளர் சி. ஜெயராமன் கூறுகிறார்.

ஆனால், இந்தத் தீ இந்த அளவு மூர்க்கமாகப் பரவியதற்கு இது மட்டும் காரணமல்ல. அங்கிருந்த ‘லாண்டானா கமாரா’ எனும் களைச்செடிக்கு இந்தத் தீ விபத்தில் முக்கியப் பங்குண்டு. உலகெங்கும் பரவியிருக்கும் இந்தக் களைச்செடி எளிதிலும் வேகமாகவும் தீ பற்றக்கூடியது. மேலும், அது தன்னைச் சுற்றியிருக்கும் தாவரங்களையும் விரைவில் எரியவைக்கும்.

காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

காட்டின் நிலப் பகுதியில் ஏற்படும் தீயானது, காட்டுக்கு நீண்ட நாள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அந்தத் தீயானது நிலத்தில் முளைத்திருக்கும் செடி, கொடி உட்பட அனைத்தையும் ஒட்டுமொத்தமாக எரித்துக் காட்டை நிர்மூலமாக்கிவிடும். இத்தகைய பாதிப்பிலிருந்து காடு மீண்டு பழைய நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் பிடிக்கும்.

இதற்கு அடுத்தபடியாக இயற்கையாகவோ யானைகளாலோ முறிக்கப்பட்ட மரங்கள் முற்றிலும் எரிந்துவிடுகின்றன. இறுதியாக, மரங்களும் புதர்களும் முற்றிலும் எரிந்து தரைமட்டமாகி விடுகின்றன.

மரங்களின் ‘கிரீடங்கள்’ என அழைக்கப்படும் கிளைகள், இலைகள், முக்கியத் தண்டுகளில் இருந்து நீளும் இனப்பெருக்கக் கட்டமைப்புகள் போன்றவை முற்றிலும் எரிந்து நிரந்தரமாகச் சேதமடைந்துவிடுகின்றன.

மீட்சிக்கான வழி என்ன?

காட்டுத் தீக்குப்பின் எரிந்த சருகுகளும் இலைகளும் சாம்பலாகத் தரையில் படிந்து, நிலத்தைச் செறிவூட்டும். தீ விபத்துக்குப் பின் காடு மீள்வதற்குச் சில காலம் பிடிக்கும். இயற்கையாக அது நடந்தே தீரும். பெரும்பாலான காடுகள் அடுத்த மழைக் காலத்திலேயே மறுவாழ்வு பெற்று இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பிக்கும்.

பந்திபூர் தீ விபத்தைக் காட்டுயிர்கள் எவ்வாறு சமாளிக்கும்?

பொய்யான தகவல்கள், வாட்ஸ்-அப் மூலம் அதிகமாகப் பரப்பப்படுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் தீ ஏற்பட்ட உடனே, காட்டுயிர்கள் தப்பித்து ஓடிவிடும். இந்த பந்திபூர் தீ விபத்தில் யானை, புலி உள்ளிட்ட எந்தக் காட்டுயிரையும் நாம் இழக்கவில்லை.

காடு மீண்டும் முளைத்துத் தன் இயல்புக்குத் திரும்பியவுடன், தப்பித்து ஓடிய அந்த உயிரினங்கள் திரும்பி வந்துவிடும். அதற்குச் சில காலம் பிடிக்கும். ஓர் ஆண்டு வரைகூட ஆகலாம். ஆனால், அந்த விலங்குகள் இந்தச் சூழலைச் சமாளித்துவிடும்.

இதைத் தடுத்திருக்க முடியுமா?

பொதுவாகக் காட்டில் தீ ஏற்படும்போது, நீண்ட வரிசையில் மரங்களையும் புதர்களையும் அகற்றி, நிலத்தை வெறுமையாக்கி, தீ கட்டுப்பாட்டுக் கோட்டை உருவாக்குவதே, தீயைப் பரவவிடாமல் தடுக்கும் வழிமுறை. ஆனால், பந்திபூரின் தீ விபத்து மிக வேகமாகப் பரவிய ஒன்று. ‘அதிக வெப்பத்தாலும் கூடுதல் வேகத்தில் வீசிய காற்றினாலும், வனத்துறையினரின் தீ கட்டுப்பாட்டுக் கோட்டைப் போன்ற வழக்கமான வழிமுறைகள் கைகொடுக்கவில்லை. எதுவும் செய்ய இயலாத கையறு நிலையிலேயே இருந்தோம்’ என வனத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x