Published : 18 Aug 2018 11:20 AM
Last Updated : 18 Aug 2018 11:20 AM
விளைச்சல் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது, விளைச்சலைக் காசாக்குவது. உலகுக்கே சோறு போடும் விவசாயிகளுக்கு அந்த வருமானம்தான் சோறு போடும். ஆனால், அந்த வருமானம் விவசாயிகளுக்கு வந்து சேர்வதற்குள், இன்னொரு போகம் முடிந்துவிடும். அல்லது, கிடைத்த லாபம், விவசாயிகளின் வாய்க்கும் வயிற்றுக்கும்கூடப் போதாமல் இருக்கும்.
இடைத்தரகர்களால் வந்தது இந்த நிலை. விளைபொருட்களை, நேரடியாக நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் இல்லாத சூழலில், அவர்கள் இடைத்தரகர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையில், இந்த இடைத்தரகர்கள் புகுந்துகொண்டு, ஆடுகிற ஆட்டத்தில், பாதி நஷ்டம் நுகர்வோருக்கு. முழுமையான நஷ்டம் விவசாயிகளுக்கு!
நுகர்வோருக்குத் தேவைப்படும் பொருள் சரியான விலையில் கிடைக்காமலும், தான் விற்கும் பொருளுக்குச் சரியான லாபம் கிடைக்காமலும் என தமிழக வேளாண் வணிகம் 1999 வரை, இடைத்தரகர்களின் கையில் இருந்தது.
சலுகையுடன் கூடிய சந்தை
1999-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி முதல் அந்த நிலை மாறியது. அன்று தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி, ‘உழவர் சந்தை’ எனும் புதுமையான திட்டத்தைக் கொண்டு வந்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளை, தாங்களே நேரடியாக நுகர்வோரிடம் விற்பனை செய்ய முடிந்தது. இடைத்தரகர்களுக்கு அங்கு வேலை இல்லை. தன் விளைபொருளுக்கான விலையை, விவசாயியே முடிவுசெய்தார். நுகர்வோருக்கும் தரமான பொருட்கள், நியாயமான விலையில் கிடைக்கத் தொடங்கின.
உழவர் சந்தையில், ஒவ்வொரு விவசாயிக்கும் தனியே இடம் ஒதுக்கப்பட்டது. இலவசமாக எடைக் கருவிகள் வழங்கப்பட்டன. அது மட்டுமல்லாமல், தங்கள் இடத்திலிருந்து சந்தை இருக்கும் இடத்துக்குப் பொருட்களை, அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றி வர அனுமதியளிக்கப்பட்டது.
இந்தச் சலுகைகளைப் பெற்ற விவசாயிகள் பலர், குடும்பமாகச் சேர்ந்து சந்தையில் தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்தார்கள். இதன் மூலம் முழுமையான பயன் நுகர்வோருக்கும் விவசாயிகளுக்கும் கிடைத்தது.
அண்ணா நகரில் முதல் உதயம்
1998-ல் ‘விவசாய உற்பத்திச் சந்தைப்படுத்துதல் வரி மீளாய்வுக் குழு’ ஒன்றை அமைத்தார் கருணாநிதி. தமிழ்நாடு வர்த்தக மற்றும் தொழில்துறைகளின் சங்கத்தின் அப்போதைய தலைவர் எஸ்.ரத்தினவேலு, அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்தார். அவர் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று, விவசாயிகள் எவ்வாறு தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்பது குறித்து ஆய்வுசெய்தார்.
அவர், தன் பயணங்களை முடித்துவிட்டு, தமிழகம் திரும்பிய பிறகு, தன்னுடைய அனுபவங்களைக் கருணாநிதியுடன் பகிர்ந்துகொண்டார். அப்போது, சண்டிகரில் ‘அப்னே மண்டி’ என்ற பெயரில் தங்களின் டிராக்டர்களில் அமர்ந்துகொண்டு, விளைபொருட்களை, நேரடியாக நுகர்வோருக்கு விவசாயிகள் விற்பனை செய்வதைப் பற்றிச் சொன்னார். இதே போன்றதொரு விற்பனை முறை, ஆந்திராவில் இயங்கி வருவதையும் குறிப்பிட்டார்.
அவற்றை அடிப்படையாக வைத்து, ரத்தினவேலுவை அறிக்கை ஒன்றைத் தயாரிக்கச் சொன்னார் கருணாநிதி. அந்த அறிக்கை தன் கையில் கிடைத்த அதேநாள் மாலை, ‘உழவர் சந்தைத் திட்ட’த்தை கருணாநிதி அறிமுகப்படுத்தியிருக்கிறார். மாநிலத்தின் முதல் உழவர் சந்தை, தமிழ்நாடு வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் அமைந்திருக்கும் மதுரையில் உதித்தது. அந்தப் பெருமை பெற்ற இடம், மதுரை அண்ணா நகர்.
பின்தொடரும் இந்தியா!
சென்னை பல்லாவரத்தில், 100-வது உழவர் சந்தை தொடங்கப்பட்டது. 1999-2000 ஆகிய ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் மாநிலம் முழுவதும் 103 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. 2001-2006-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இந்தத் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. பிறகு, மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்தவுடன், 2007-2008 காலகட்டத்தில் மேலும் 51 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. 2010-2011 காலகட்டத்தில் கூடுதலாக 25 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. தற்சமயம் தமிழகம் முழுவதும் 179 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.
இந்த ஆண்டு தனது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ‘கிராம விவசாயச் சந்தைகள்’ (கிராமின் அக்ரிகல்சுரல் மார்க்கெட்ஸ்) நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்று சொன்னார். ஏற்கெனவே பஞ்சாப், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் விவசாயிகளுக்கான சந்தைகள் இருந்தாலும் தமிழகத்தில் தொடங்கப்பட்ட உழவர் சந்தைத் திட்டம்தான் விரிவுபடுத்தப்பட்ட வகையில் செயற்பட்டது. அந்த அடிப்படையில் மத்திய அரசின் திட்டத்துக்கு கருணாநிதியின் உழவர் சந்தைதான் முன்மாதிரி எனலாம்.
இது மட்டுமல்லாது ‘அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்’ திட்டமும் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த இரு திட்டங்களே விவசாயிகளின் மேல் கருணாநிதி அரசு காட்டிய அக்கறைக்கு முதன்மையான சான்றுகள்.
தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT