Published : 31 Mar 2025 09:20 PM
Last Updated : 31 Mar 2025 09:20 PM
சென்னை: தமிழக - கேரள வனப்பகுதிகளில் கடந்த 27 மாதங்களாக தண்டவாளத்தை கடக்க முற்படும் யானைகள் மீது ரயில் மோதி எந்த உயிரிழப்பு சம்பவமும் நடைபெறவில்லை என உயர் நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக - கேரள வனப்பகுதிகளில் தண்டவாளங்களை கடக்க முற்படும்போது ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி,பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தெற்கு ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்குமார், “யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழக மற்றும் கேரள வனத்துறையுடன் இணைந்து தெற்கு ரயில்வே நிர்வாகம் கோவை, பாலக்காடு ஒட்டிய வனப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு யானைகள் ரயில் தண்டவாளங்களை கடக்கும் 11 இடங்களை அடையாளம் கண்டுள்ளது.
இதில் 9 இடங்களில் சுரங்க வழித்தடங்கள் அமைக்கப்பட்டு தண்டவாளங்களுக்கு அடியில் யானைகள் கடந்து செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது. 2 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல போத்தனூர் - மதுக்கரை பகுதிகளில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் யானை நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் 2 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நவீன கேமராக்கள் யானைகள் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள 150 மீட்டர் தூர சுற்றளவுக்குள் வந்தால் உடனடியாக அருகில் உள்ள ரயில் நிலைய மேலாளர் மற்றும் ரயி்ல் ஓட்டுநர்களுக்கு தகவல்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக பாலக்காடு - போத்தனூர் வழித்தடம் உள்ளிட்ட தமிழக - கேரள வனப்பகுதிகளில் தண்டவாளத்தைக் கடக்க முற்படும் யானைகள் மீது ரயில் மோதி கடந்த 27 மாதங்களாக எந்த உயிரிழப்பு சம்பவமும் நடைபெறவில்லை”, என்றார்.
இதையேற்ற நீதிபதிகள், இது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment