Published : 27 Mar 2025 08:01 PM
Last Updated : 27 Mar 2025 08:01 PM
மதுரை: தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தும் பணிக்கு மாநில அரசு திட்ட மதிப்பீடு அளித்தால் நிதி ஒதுக்க மத்திய அரசு தயாராக இருப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் உள்ள பழமையான படித்துறைகள், மண்டபங்களை பழமை மாறாமல் பாதுகாக்கக்கோரி முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த எழுத்தாளர் காமராசு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி. புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மற்றும் மனுதாரர் தரப்பில், தாமிரபரணி நதி மாசடைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் பேசியுள்ளார். அதற்கு தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு திட்ட மதிப்பீடு அளித்தால் தேவையான நிதியை ஒதுக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக நீர்வளத் துறை செயலாளரிடம் கேட்டு நீதிமன்றத்துக்கு உரிய தகவல் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...