Published : 26 Mar 2025 06:16 PM
Last Updated : 26 Mar 2025 06:16 PM
ராமேசுவரம்: தனுஷ்கோடி கடற்பகுதியை பிளமிங்கோ பறவைகளின் சரணாலயமாக அறிவித்திட தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பறவைகள் குறித்த விரிவான குறிப்புகளும் ஆராய்ச்சிகளும் குறைவே. அவற்றின் பெரும்பாலானவை கடற்கரையோரப் பறவைகள் குறித்த ஆய்வுகள்தான் அதிகம்.
ஒருங்கிணைந்த ராமநாதபுரம் (விருதுநகர், சிவகங்கை) மாவட்டத்தில் பறவைகள் குறித்த விரிவான கட்டுரை சி.ஹெச். பித்துல்ப் (Biddulph) எனும் ஆங்கிலேயரால் 1938-ல் பாம்பே இயற்கை வரலாறு கழகத்தின் ஆய்விதழில் முதன்முறையாக வெளியானது. இதில் இவர் ராமேசுவரம் தீவில் 109 வகையான பறவைகளைப் பட்டியலிட்டுள்ளார்.
அதுபோல தமிழ்நாட்டுப் பறவைகள் ஆய்வுகளின் முன்னோடியான பேராசிரியர் ரத்னம் ராமநாதபுரத்தில் உள்ள சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் பணிபுரிந்த காலங்களில் (டிசம்பர் 1970-ல் இருந்து ஜூலை 1974 வரை) ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளுக்குச் சென்று சுமார் 172 வகையான பறவைகளைப் பார்த்து பதிவு செய்துள்ளார்.
இந்தியப் பறவையியலின் முன்னோடியான சலீம் அலி 1982-ல் ராமேசுவரத்துக்கு வந்து, தனுஷ்கோடி கடற்பகுதி வலசை வரும் பறவைகளுக்கு குறிப்பாக பிளமிங்கோ பறவைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம், என அறிவித்தார்.
சலீம் அலியின் அறிவிப்பினை தொடர்ந்து, பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் (Bombay Natural History Society-BNHS) பறவையியலாளர் பாலச்சந்திரன், 1985 முதல் 1988 வரை மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா பகுதிகளில் குறிப்பாக ராமேசுவரம் பகுதிகளில் வலசை வரும் பறவைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இந்த ஆய்வில் அவர் 187 பறவை வகைகளைப் பதிவு செய்தார்.
ராமேசுவரத்தில் தனுஷ்கோடி கடற்பகுதி பறவைகளுக்குப் புகலிடமாக விளங்கியதாக 1980-ம் ஆண்டின் கணக்கெடுப்பில் 13 ஆயிரம் பிளமிங்கோ பறவைகள் வலசை வந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் காலப்போக்கில் வாழிட சீரழிவு, பறவைகள் வேட்டை, நிலத்தடி நீர் குறைதல், நன்னீரில் உப்பு நீர் கலப்பு போன்ற பல காரணங்களால் பிளமிங்கோ பறவைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
இதனால், 80-களில் மதிப்பிடப்பட்ட 13,000 பிளமிங்கோ பறவைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து 90-களில் சுமார் 7,000 ஆகவும் 2000-ல் சுமார் 1,000 ஆகவும் குறைந்துள்ளதாக வனத்துறை மதிப்பிட்டுள்ளது. கடல் சார்ந்த பறவைகளின் வாழிடங்கள், மென்மேலும் சீரழியாமல் பாதுகாத்தல், பறவைகளின் வாழிடங்களின் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பறவைகளையும், அவற்றின் வாழிடங்களையும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களின் துணை கொண்டு பாதுகாத்தலுக்காக தனுஷ்கோடியில் பிளமிங்கோ பறவைகளின் சரணாலயத்தை உருவாக்க வேண்டும், என வனத்துறை பரிந்துரை செய்தது.
இதனடிப்படையில், தமிழக அரசு 2025-26 பட்ஜெட்டில் தனுஷ்கோடி பகுதியை பிளமிங்கோ பறவைகள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தமிழ்நாட்டின் ராமேசுவரம் தீவின் முனையில் அமைந்துள்ள தனுஷ்கோடி பகுதி, மணல் திட்டுகள், சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளின் தாயகமாகவும், பிளமிங்கோ உள்ளிட்ட வலசை பறவைகள் இடம்பெயர்வதற்கான மத்திய ஆசிய பறக்கும் பாதையின் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது.
எனவே, புலம்பெயர்ந்த ஈரநிலப் பறவைகளுக்கான வலசைப் பாதையாக விளங்கி, பல்லுயிர்ச் சமநிலையைப் பாதுகாக்கும் வகையில், தனுஷ்கோடிப் பகுதியை பிளமிங்கோ பறவைகள் சரணாலயமாக அறிவித்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment