Published : 26 Mar 2025 05:51 PM
Last Updated : 26 Mar 2025 05:51 PM

கோவையில் நில பறவைகள் கணக்கெடுப்பில் 9,033 பறவைகள் பதிவு

கோவை: கோவையில் நடைபெற்ற நில பறவைகள் கணக்கெடுப்பில் 232 வகையான 9,033 பறவைகள் பதிவு செய்யப்பட்டன. ஒருங்கிணைந்த பறவைகள் கணக் கெடுப்பு தமிழ்நாடு முழுவதும் வனத்துறை மூலம் நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் ஈர நிலபறவைகள் (wetlands) கணக் கெடுப்பு மற்றும் நில பறவைகள் ( terrestrial) கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலில் கோவை நேச்சர் சொசைட்டி நிர்வாகி செல்வராஜ், தமிழ்நாடு இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி சங்கத்தின் நிர்வாகி பாவேந்தன், இயற்கை வன நிதியம் அமைப்பைச் சேர்ந்த பூமிநாதன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் மூலம் பறவைகள் கணக் கெடுப்பு நடத்தப்பட்டது.முதற்கட்டமாக ஆனைமலை புலிகள் காப்பகம் கோவை வனக் கோட்டத்தில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு மார்ச் 8, 9 தேதிகளில் 25 ஈர நிலங்களில் நடைபெற்றது. இதில் 182 வகை பறவைகள் கண்டறியப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக நில பறவைகள் கணக்கெடுப்பு மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் 25 இடங்களில் நடைபெற்றது. இதில் 232 வகையான 9,033 பறவைகள் பதிவு செய்யப்பட்டன. அதிகபட்சமாக கூத்தமண்டி, காந்தவயலில் 763, கோவை குற்றாலத்தில் 724, பனப்பள்ளி மற்றும் கொண்டனூரில் 643 பறவைகள் கண்டறியப்பட்டன. கூத்தமண்டியில் 141 மற்றும் காந்தவயலில் 115 என அதிகபட்ச பறவை வகைகள் பதிவு செய்யப்பட்டன.

ஊரக பகுதியில் தாளியூரில் 46 வகையும், நகர பகுதியில் ஐ.ஓ.பி. காலனியில் 64 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டன. இதே போல 10 வகை இரவாடி பறவைகள் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டன. இதில் 232 வகை பறவை இனங்களில் 207 நில பறவைகளும், 25 வகை நீர் வாழ் பறவைகளும் அடங்கும். மொத்தம் பதிவான 9033 பறவைகளில் 8478 நில பறவைகளும், 555 நீர் வாழ் பறவைகளும் அடங்கும்.

அதே போல வலசை பறவைகளை பொறுத்தவரை 41 வகை பறவைகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 3 நீர்வாழ் பறவை இனங்கள் ஆகும். வலசை பறவைகளில் 555 பறவைகள் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டன. இதில் மலபார் கருப்பு வெள்ளை இருவாச்சி, பெரிய அலகு மீன்கொத்தி, சிறு ஆந்தை, பெரிய பச்சைப்புறா உள்ளிட்ட பறவைகள் பதிவு செய்யப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x