Published : 24 Mar 2025 05:34 PM
Last Updated : 24 Mar 2025 05:34 PM
சென்னை: நாட்டின் மின்சார வாகனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ‘கார்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டத்தை’ (Zero e-mission) தொடங்கியுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி முதல் கொள்கை, வெளிநடவடிக்கை மற்றும் பாதுகாப்பு வரை பல்வேறு களங்களில் மின்சார வாகனப் போக்குவரத்து முயற்சிகளின் விரிவான தொகுப்பான ‘கார்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டத்தை (Zero e-mission) அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்முயற்சிகள் வருமாறு:
மின்சார வாகன பேட்டரி பொறியியல் ஆய்வகம்: பேட்டரி தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் வலுவான பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட அதிநவீன வசதி.
பேட்டரி சார்ஜிங் உள்கட்டமைப்பு ஆய்வகம்: ஆன்போர்டு & ஆஃப்போர்டு சார்ஜர்கள், எக்ஸ்ட்ரீம் ஃபாஸ்ட் சார்ஜிங் (XFC) தீர்வுகள், வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம்ஸ், பேட்டரி ஸ்வாப்பிங் & கிரிட் ஒருங்கிணைப்பு போன்ற மின்சார வாகனங்களுக்கான மேம்பட்ட சார்ஜிங் தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் ஒரு முன்னோடி ஆராய்ச்சி வசதி.
மின்சார வாகனப் போக்குவரத்து பற்றிய சான்றிதழ் படிப்பு: மின்சார வாகனங்களில் அதிநவீன திறமைகளைக் கொண்ட நிபுணர்களை ஈடுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட 100 மணிநேர ஆன்லைன் பாடநெறி
மின்சார வாகனப் போக்குவரத்து பற்றி இணையம் சார்ந்த எம்டெக் படிப்பு: மின்சார வாகனத் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற விரும்பும் பணிபுரியும் நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.
இந்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் ஹனிஃப் குரேஷி, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் விஞ்ஞானி டாக்டர் பிரீத்தி பன்சால், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) நிர்வாக இயக்குநர் பி.கே. பானர்ஜி ஆகியோர் முன்னிலையில் இந்த முன்முயற்சிகள் இன்று (மார்ச் 24, 2025) இக்கல்வி நிறுவன வளாகத்தில் தொடங்கப்பட்டன.
மேலும், சென்னை ஐஐடி அதிகாரிகளான இயக்குனர் பேராசிரியர் வி. காமகோடி, டீன் (ஐ.சி.எஸ்.ஆர்) பேராசிரியர் மனு சந்தானம், பொறியியல் வடிவமைப்புத் துறைத் தலைவர் பேராசிரியர் சி.எஸ். சங்கர் ராம், பயிற்சிக்கான பேராசிரியர் கார்த்திக் ஆத்மநாதன், பூஜ்ஜிய உமிழ்வு டிரக்கிங்கிற்கான உயர் சிறப்பு மையத்தின் (Centre of Excellence for Zero Emission Trucking -CoEZET) தலைமை நிர்வாக அதிகாரி அஜித்குமார் டி.கே உள்ளிட்டோர், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வி.காமகோடி பேச்சு: தொடக்க நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "இதுதொடர்பான ஆராய்ச்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தோம். தற்போது, நாட்டின் பொதுவான தேவைகளை அதிலும் குறிப்பாக தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விரிவான தீர்வுகளை எங்களால் வழங்க முடியும். ஏற்கனவே ஆலோசனைகளையும், திறன் மேம்பாட்டு சேவைகளையும் எமது குழுக்கள் வழங்கி வருகின்றன, அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து, அரசும் தொழில்துறையும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டுவர வேண்டிய நேரம் இது" எனக் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment