Published : 14 Feb 2025 08:51 PM
Last Updated : 14 Feb 2025 08:51 PM

1,382 கடல் ஆமைகள் இறப்பு எதிரொலி: விசைப்படகுகளில் கருவிகளை பொருத்த பொன்முடி உறுதி

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆமைகள் இறப்பைத் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை: தமிழக கடலோர பகுதியில் 1,382 கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிய நிலையில், மீன்பிடி விசைப்படகுகள் விதிமீறல்களில் ஈடுபடுவதை கண்காணிக்க அவற்றில் கருவிகள் பொருத்தப்படும் என்று வனத்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

வனத்துறை சார்பில் கடல் ஆமைகள் பாதுகாப்பு தொடர்பாக மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கடலோர காவல்படை, இந்திய கடற்படை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வனத்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்.14) நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கடல் ஆமைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வனத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள், தன்னார்வ அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கடல் ஆமைகள் நவம்பர் முதல் மார்ச் மாதம் கவரை கடலோரப் பகுதிக்கு வந்து முட்டையிடுவது வழக்கம். அதற்காக கடற்கரை பகுதியில் இருந்து 9 கிமீ தொலைவுக்கு அவை அதிக அளவில் பயணித்து கரைக்கு வருகின்றன. இந்த பகுதியில் விசைப் படகுகளில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி, தடை விதிக்கப்பட்ட பகுதியில் விசைப்படகில் மீன் பிடிக்கும்போது, வலையில் ஆமைகள் சிக்கி உயிரிழக்கின்றன. அதைத் தடுக்க வனத்துறையும், மீன்வளத்துறையும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்த ஆண்டு ஆந்திர பகுதியில் 1,111 கடல் ஆமைகள் இறந்துள்ளன. தமிழகத்தில் 1,706 கிமீ நீளம் கொண்ட கடற்கரையில் 1,382 ஆமைகள் உயிரிழந்துள்ளன. இந்த ஆண்டு கடலூர், நாகப்பட்டினம், சென்னை ஆகிய 3 கடலோர மாவட்டங்களில் தான் ஆமைகள் அதிக அளவில் இறந்துள்ளன. இது வழக்கத்தை விட அதிகமானது. இந்நிலையில், விதிகளை மீறி, கடற்கரையில் இருந்து 9 கிமீ தொலைவுக்குள் விசைப்படகுகளில் மீன் பிடித்த 208 படகுகளின் உரிமையாளர்கள் மீது மீன்வளத்துறை மூலமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விசைப்படகு மீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.3.28 லட்சம் மதிப்பில் மீன்வளத்துறை சார்பில் டீசல் மானியம் வழங்கப்படுகிறது. விதிமீறலில் ஈடுபட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு டீசல் மானியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விசைப்படகுகள் விதிமீறலில் ஈடுபடுவதை கண்காணிக்க, அந்த படகுகளில் மீன்வளத்துறை மூலமாக கருவிகள் பொருத்தவும், மீன்வளத்துறை சார்பில் கடலுக்கு சென்று கண்காணிக்க வனத்துறை சார்பில் படகுகள் வாங்கி கொடுப்பது என இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, வனத்துறை தலைவர் சீனிவாஸ் ரெட்டி, தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ்குமார் டோக்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x