Published : 09 Jan 2025 06:46 PM
Last Updated : 09 Jan 2025 06:46 PM
உதகை: உதகை எச்பிஎப் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூரை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் புலி, கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வருவதாலும், வனப்பகுதிகள் குறைந்து வருவதாலும் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன. இதனால் அவ்வப்போது மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில், உதகையில் இருந்து பைக்காரா செல்லும் சாலையில் உள்ள கிளன்மார்கன் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக கலந்த சில மாதங்களுக்கு முன்பு வீடியோ பரவியது. இதற்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பைன்பாரஸ்ட் பகுதியில் புலி நடமாட்டம் தென்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகைக்கு சில நாட்கள் தடை விதிக்கப்பட்டது.
தற்போது உதகை எச்பிஎப் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக வீடியோ ஒன்று கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலையோரமாக கம்பீரமாக அந்த புலி நிற்பது போல் அந்த வீடியோவில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ''வனப்பகுதி அதிகம் உள்ள மாவட்டம் என்பதால் இங்கு சிறுத்தை, புலி, கரடி உட்பட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. சில சமயங்களில் சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து வளர்ப்பு பிராணிகளை பிடித்து சென்று விடுகின்றன. கடந்த வாரம் மஞ்சூர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய தொழிலாளி ஒருவர் கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரியில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊட்டி எச்பிஎப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே இந்த புலியால் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் கண்காணிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT