Published : 06 Jan 2025 01:44 AM
Last Updated : 06 Jan 2025 01:44 AM
காந்திநகர்: குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் கெவாடியா பகுதியில், உலகின் மிகப்பெரிய அளவில் சர்தார் வல்லபபாய் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்குள்ள தேசிய வனவிலங்கு பூங்காவில் ‘பிளாக்பக்’ எனப்படும் மான் இனங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்திய மான் என்றழைக்கப்படும் இவற்றை சுற்றுலா பயணிகள் ஏராளானோர் தினமும் வந்து செல்கின்றனர். இதற்காக வன சபாரி அழைத்து செல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த புத்தாண்டு 1-ம் தேதியன்று சிறுத்தை ஒன்று திடீரென பூங்காவுக்குள் புகுந்து பிளாக்பக் மான் ஒன்றை கொன்றது. அதை பார்த்த அதிர்ச்சியில் 7 மான்கள் உயிரிழந்துள்ளன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘புத்தாண்டு தினத்தன்று அதிகாலை, பூங்காவின் மிகப் பாதுகாப்பான வேலியை தாண்டி 3 வயதுக்குள் உள்ள சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. மான்கள் உள்ள பகுதிக்கு சென்ற சிறுத்தை ஒரு மானை கொன்றது. அந்த அதிர்ச்சி மற்றும் பயத்தில் அங்கிருந்த மற்ற 7 மான்களும் உயிரிழந்துள்ளன. அந்த 8 மான்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது பின்னர் எரிக்கப்பட்டன’’ என்றனர்.
துணை வனப் பாதுகாவலர் அக்னீஸஅவர் வியாஸ் கூறும்போது, ‘‘ கெவாடியா மண்டலத்தில் உள்ள வனப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் சாதாரணமானதுதான். எனினும், பூங்காவுக்குள் நுழைந்து மானை கொன்றது இதுதான் முதல் முறை. சபாரி செல்லும் பூங்காவை சுற்றிலும் 400 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அவற்றின் மூலம் சிறுத்தை நுழைந்தது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாவலர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்றவுடன் சிறுத்தை தப்பியோடியது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT