Last Updated : 04 Jan, 2025 05:10 PM

 

Published : 04 Jan 2025 05:10 PM
Last Updated : 04 Jan 2025 05:10 PM

25 அடி நீளம், 7 அடி ஆழம்... திருச்செந்தூர் கடற்கரையில் அதிகரிக்கும் கடலரிப்பு!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை பகுதியில் அலைகளின் சீற்றம் காரணமாக கடலரிப்பு ஏற்பட்டு பக்தர்கள் நீராட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. மற்ற முருகன் கோயில்கள் மலை மீது உள்ள நிலையில், திருச்செந்தூரில் மட்டுமே கடலோரத்தில் இயற்கை அழகுடன் முருகன் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விசேஷ காலங்கள் மற்றும் திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். ஐப்பசி மாதம் நடக்கும் கந்த சஷ்டி விழா விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி லண்டன், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்து, தங்கியிருந்து விரதம் கடைபிடிப்பார்கள்.

அதிகரிக்கும் கடலரிப்பு: திருச்செந்தூர் வரும் பக்தர்கள் கடல் தீர்த்த கட்டத்திலும், நாழிகிணற்றிலும் நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள். இக்கோயிலையொட்டி உள்ள கடற்கரை அழகு மிகுந்தது. இக்கடற்கரையில் கோயிலுக்கு திருப்பணி செய்த மவுன சுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமி ஆகிய 3 பேரின் ஜீவ சமாதி உள்ளது.

திருச்செந்தூர் கோயில் முன்புள்ள கடற்கரை பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு.

மேலும் மூலவருக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படும் செல்வதீர்த்தம், சந்தோஷ மண்டபம், அய்யா அவதாரபதி ஆகியவை கடற்கரையில் உள்ளன. திருச்செந்தூர் கடற்ரையில் கடந்த சில மாதங்களாக கடலரிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அய்யா வழி அவதாரபதியில் இருந்து சந்தோஷ மண்டபம் வரையிலான பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டு கடற்கரை பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து இந்த பகுதியில் ராட்சத கற்களை குவித்து தற்காலிகமாக நிலைமையை சமாளித்தனர்.

25 அடி நீளத்துக்கு... இந்நிலையில் திருச்செந்தூர் கோயில் முகப்பு கடற்கரை பகுதியில் தற்போது கடல் அரிப்பு அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இங்குள்ள படித்துறை அருகே கடந்த இரு நாட்களாக கடுமையான கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 25 அடிநீளம், சுமார் 7 அடி ஆழத்துக்கு கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால், படிக்கட்டுகள் வழியாக இறங்கி பக்தர்கள் நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் திருச்செந்தூரில் கடல் உள்வாங்குவதும் அண்மை காலமாக அதிகரித்துள்ளது. கடலரிப்பு மற்றும் கடல்நீர் உள்வாங்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கடலரிப்பில் இருந்து திருச்செந்தூர் கடற்கரையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x