Published : 03 Jan 2025 04:52 PM
Last Updated : 03 Jan 2025 04:52 PM

மதுரையில் முதல் முறையாக 7 வகை வண்ணத்துப்பூச்சிகள் கண்டுபிடிப்பு

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஏழு வகை வண்ணத்துப்பூச்சிகள் முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. உலகில் ஏறக்குறைய 20,000 வகையான வண்ணத்துப்பூச்சிகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,800 வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டறிந்துள்ளனர். தமிழகத்தில் 320-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் உள்ளதாக தமிழ்நாடு வனத்துறை 2018-ஆம் ஆண்டு வெளியிட்ட தமிழ்நாட்டின் வண்ணத்துப்பூச்சிகள் நூல் குறிப்பிட்டுள்ளது.

மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை குழுவினர் கடந்த 28-ம் தேதி மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம், து.கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து சதுரகிரி மகாலிங்கம் கோயில் செல்லும் மலைப்பாதையில் வண்ணத்துப்பூச்சிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். காட்டுயிர் ஆய்வாளர் விஸ்வநாத் ஒருங்கிணைப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

காட்டுயிர் ஆய்வாளர் விஸ்வநாத் கூறுகையில், ''மதுரை மாவட்டத்தில் வண்ணத்துப்பூச்சிகளை தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறோம். அந்த ஆய்வு பயணத்தில் சுமார் 58 வகை வண்ணத்துப்பூச்சி இனங்கள் அன்றைய நாளில் கண்டறியப்பட்டது. இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக மதுரை மாவட்ட வண்ணத்துப்பூச்சி இனங்களின் பட்டியல் மற்றும் பதிவேட்டை பராமரித்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக சதுரகிரி மலைப்பாதையில் கடந்த 28-ம் தேதி ஆய்வுப் பயணம் மேற்கொண்டோம்.

இப்பயணத்தில் எங்கள் பட்டியலில் இல்லாத ஏழு வகை வண்ணத்துப்பூச்சிகளை முதல்முறையாக மதுரை மாவட்டத்தில் ஆவணப்படுத்தியுள்ளோம். தென்னக நீல சங்கழகன், (Southern Banded Bluebottle), மயில் தோரணையன் (Peacock Royal), வரிக்கொடு ஐந்து வளையன் (Striated Five Ring), மலபார் புள்ளி இலையொட்டி, (Malabar Spotted Flat), அடர்நிற புற்த்துள்ளி (Dark Palm Dart), காவித் துள்ளி (Orange Owlet), நீலகிரி நால்வளையன் (Nilgiri Four ring) உள்ளிட்ட 7 வகை வண்ணத்துப்பூச்சிகள் மதுரை மாவட்டத்தில் முதல்முறையாக பதிவு செய்துள்ளோம். எங்கள் கணக்கெடுப்பின்படி இதுவரை 161 வகை வண்ணத்துப்பூச்சிகளை கடந்த 10 ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தில் பதிவு செய்துள்ளோம், '' என்றார்.

மதுரையில் வண்ணத்துப்பூச்சி பூங்கா: சூழலியலாளர் தமிழ்தாசன் கூறுகையில், ''மதுரை மாவட்டத்தில் சதுரகிரி, வாசிமலை, சிறுமலை, அழகர்மலை, நாகமலை, எத்திலா மலை உள்ளிட்ட மலைத்தொடர்களிலும் அதன் அடிவார பள்ளத்தாக்கு பகுதியிலும் வண்ணத்துப்பூச்சிகளை பரவலாக காண முடியும். பாலமேடு சாத்தையாறு அணை, ம. கல்லுப்பட்டி அய்யனார் கோயில் அணை, உசிலம்பட்டி அசுவமா நதி அணை, குலசேகரன்கோட்டை பழனியாண்டவர் அணை, கேசம்பட்டி பெரியருவி அணை, ஊதப்பநாயக்கனூர் மலட்டாறு அணை உள்ளிட்ட பகுதிகள் மதுரை மாவட்டத்தின் நீர்வழி பள்ளத்தாக்கு பகுதிகளாகும்.

வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா அமைக்க தகுந்த ஈரமான நிலப்பகுதிகள் என்று மேற்சொன்ன அணைப்பகுதிகளை மதுரை மாவட்ட நிர்வாகத்திடமும், வனத்துறையிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். வண்ணத்துப்பூச்சிகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் திருச்சி, கோவை, பொள்ளாச்சியில் உள்ளதை போல மதுரையிலும் வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். இயல் தாவரங்களை கொண்டே வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா அமைக்க வேண்டும். அப்போதுதான் வண்ணத்துப்பூச்சிகள் குறித்து விழிப்புணர்வு அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பரவலாக சென்று சேரும்,'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x