Published : 23 Dec 2024 05:28 PM
Last Updated : 23 Dec 2024 05:28 PM

மதயானை சாணத்தில் ஸ்பிரே, புகை, மிளகாய் தூள் தோரணம் - பந்தலூர் யானையை விரட்ட வனத்துறை முயற்சி

பந்தலூர்: பந்தலூர் சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 45-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேதப்படுத்திய சிடி16 என்ற புல்லட் ராஜா காட்டு யானை ட்ரோன் கேமரா மூலம் அதன் இருப்பிடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

அரிசி சுவைக்கு பழக்கப்படுத்தப்பட்ட இளம் ஆண் காட்டு யானை ஒன்று, நீலகிரி மாவட்டத்தின் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சேதப்படுத்தி அரிசியை எடுத்து உட்கொண்டு வருகிறது. மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் பழங்குடிகள், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தி உள்ளே நுழைவது எளிதாக இருப்பதால், அந்தப் பகுதிகளில் தொடர்ந்து நடமாடி வருகிறது.

நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழையும் குறிப்பிட்ட அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தனிக்குழு அமைத்து அந்த யானையைக் கண்காணித்து வந்த நிலையில், யானை ஊருக்குள் நுழையாமல் இருக்க மதம் பிடித்த யானையின் சாணத்தில் ஸ்பிரே, புகை மற்றும் மிளாகாய் தூள் தடவப்பட்ட துணி தோரணம் என மாற்று வழிமுறைகளில் களம் இறங்கியிருக்கிறது வனத்துறை.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, ''பகலில் வனப்பகுதியில் மேய்ச்சலில் இருந்தாலும் அரிசியின் சுவைக்கு பழக்கப்பட்ட இந்த யானை, இரவில் ஊருக்கு வருகிறது. டிரோன் கேமராக்கள், கும்கி யானைகள், இரவிலும் கண்காணிக்க தெர்மல் கேமிரா என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. மதம் பிடித்த ஆண் யானையின் நடமாட்டம் இருக்கும் பகுதிகளை மற்றொரு ஆண் யானை தவிர்க்கும் என்பதால், முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் தற்போது மஸ்தில் இருக்கும் யானைகளின் சாணத்தைச் சேகரித்து வந்து பல பகுதிகளிலும் தெளிக்கப்படுகிறது.

யானை சாணத்தை நெருப்பில் போட்டு புகை உண்டாக்கப்படுகிறது. வீடுகளின் கதவுகள், ஜன்னல்களில் மிளகாய் தூள் தடவப்பட்ட துணிகளால் தோரணம் கட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த யானை ஊருக்குள் நுழையாமல் இருக்கும் என நம்புகிறோம்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x