Published : 19 Dec 2024 07:06 PM
Last Updated : 19 Dec 2024 07:06 PM

‘எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்தை கைவிடுக’ - முதல்வருக்கு அரசியல் கட்சிகள் கோரிக்கை

சென்னை: "எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்" என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாக தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் எண்ணூரில் அமைத்து வரும் நிலக்கரி அனல்மின் நிலையத்துக்காக 2009-ல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் முடிவடைந்ததால் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி புதிய சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முயற்சியை டான்ஜெட்கோ தொடங்கியுள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை (டிச.20) எர்ணாவூர் மகாலெட்சுமி நகரில் உள்ள பெருந்தலைவர் காமராசர் மாளிகையில் நடைபெறும் எனத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

எண்ணூர், மணலியில் வெறும் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இரண்டு பெரிய அனல் மின் நிலையங்கள், மூன்று துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள், உரத் தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலை, பாலிமர் மற்றும் ரசாயன ஆலைகள், வாகனத் தொழிற்சாலை, நிலக்கரி சேமிப்பிடங்கள் என சூழலைப் பாதிக்கும் 40-க்கும் மேற்பட்ட அபாயகரமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

10 லட்சத்துக்கும் அதிகமான உழைக்கும் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் வட சென்னையில் ஏற்கனவே 3330MW அளவிற்கான அனல்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. விரைவில் 800 MW உற்பத்தித் திறன் கொண்ட மற்றொரு அலகு செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த நிலையில் மேலும் புதிதாக 660MW அனல்மின் நிலையத்தை அங்கு அமைப்பது அப்பகுதியை வாழத்தகுதியற்ற இடமாக மாற்றிவிடும்.

பொதுமக்கள் கருத்துக் கேட்பிற்காக 2019-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கையை மின்சாரத் துறை சமர்ப்பித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையை வைத்து இப்போது கருத்துக் கேட்பதே தவறானது. இந்த 5 ஆண்டுகளில் எண்ணூர் பகுதியின் சூழல் எவ்வளவோ மோசமடைந்து விட்டது. அதே 2019-ம் ஆண்டில் மட்டும் 130 நாட்களுக்கு மேலாக எண்ணூர் பகுதியில் காற்றின் தரம் மோசமாக மற்றும் மிகவும் மோசமாக இருந்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், அங்குச் செயல்பட்டு வரும் இரண்டு பெரிய அனல் மின் நிலையங்கள்தான். சராசரியாக ஒரு 500MW அனல் மின் நிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 105 டன் சல்பர் டை ஆக்சைடு , 24 டன் நைட்ரஜன் ஆக்சைடு, 2.5 டன் நுண்துகள்கள், மற்றும் 3500 டன் அளவிற்கு சாம்பல் உள்ளிட்ட காற்று மாசு வெளியேறுகிறது.

அனல் மின் நிலையங்களிலிருந்து டன் கணக்கில் வெளியேறும் சாம்பல் எண்ணூர் கழிமுகம் பகுதியில் கலந்து அப்பகுதியின் சூழலை கடுமையாகப் பாதித்துள்ளது. ஒரு காலத்தில் விவசாய பூமியாக இருந்த செப்பாக்கம் போன்ற கிராமங்கள் கூட தற்பொழுது அனல் மின்நிலைய சாம்பலால் சூழப்பட்டு மரம், செடி கூட வளர முடியாத சாம்பல் பாலைவனமாக மாறியுள்ளது. கடும் வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய கருவேலம் மரம் கூட இங்கு வளரவில்லை என்றால் இப்பகுதியில் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முக்கியமாக அப்பகுதி மீன் உற்பத்தியைக் குறைத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகள் நேரடியாக கேள்விகுறியாக்கியுள்ளது. எண்ணூர், மணலி சூழலியல் சீர்கேட்டினை ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை, அங்கு புதிதாக காற்று மாசுபாடு ஏற்படுத்தும் சிவப்பு நிற தொழிற்சாலைகள் துவங்கக் கூடாது என பரிந்துரைத்துள்ளது. வட சென்னையில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையங்களில் இருந்து நீரிலும் காற்றிலும் வெளியேறும் சாம்பல் எண்ணூர் கழிமுகப் பகுதியினை கடுமையாக பாதித்துள்ளதை பேராசிரியர்கள் சுல்தான் இஸ்மாயில், நரசிம்மன், பாலாஜி நரசிம்மன் ஆகியோர் கொண்ட குழு அளித்த பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

ஹெல்த் எனெர்ஜி இனிசியேட்டிவ் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று திருவொற்றியூர், காசிமேடு, குருவிமேடு, மீஞ்சூர், ஊரணம்மேடு, செப்பாக்கம், அத்திப்பட்டு, காட்டுக்குப்பம் போன்ற அனல் மின் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் PM 2.5 நுண்துகளின் அளவு உலக சுகாதார நிறுவனம் பாதுகாப்பான அளவாக நிர்ணயித்துள்ளதைவிட எட்டு மடங்குவரை அதிகமாகப் பதிவாகியதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த அளவிற்கு நுண்துகளால் மாசடைந்த காற்றை சுவாசித்தால் மக்கள் தங்கள் வாழ்நாளில் 5 முதல் 7 ஆண்டுகளை இழக்க நேரிடும் என AQLI அமைப்பின் ஆய்வறிக்கை எச்சரிக்கின்றது.

இது மட்டுமல்லாமல் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களைச் சுற்றி வரவுள்ள அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் 52,700 பேர் அகால மரணம் அடைய நேரிடும் என்றும் இதில் டெல்லி, மும்பை, பெங்களூரைக் காட்டிலும் சென்னையில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் எனவும், மேலும், 31,700 குறை பிரசவங்களும், பல்லாயிரம் பேருக்கு ஆஸ்துமாவினாலும் பாதிப்பு ஏற்பட்டு கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்குச் செல்லும் அபாயம் நிகழக்கூடும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

எண்ணூர்-மணலி பகுதிகளில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையங்களும், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகளும் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றன . ஏப்ரல் 2019-ல் இருந்து டிசம்பர் 2020 வரை 660 நாட்களில் சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனமும், 418 நாட்கள் வட சென்னை அனல்மின் நிலையம் 273 நாட்களும், தமிழ்நாடு பெட்ரோலியம் நிறுவனம் 228 நாட்களும் காற்று மாசு விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு மின்சாரத் துறை இயக்கிவரும் அனல் மின் நிலையங்களின் பொறுப்பற்ற அலட்சியமான நடவடிக்கைகளால் பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு, எண்ணூர் முகத்துவாரம் ஆகிய நீர்நிலைப் பகுதிகளில் சாம்பல் கழிவுகள் கலந்து கடுமையாக மாசடைந்துள்ளன. இப்பகுதிகளை மறுசீரமைக்க 2 ஆண்டுகளுக்கு முன்பே தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டும்கூட இன்றைய நாள்வரை இதற்கான விரிவான திட்ட அறிக்கைகூட தயாரிக்கப்படவில்லை.

இந்தச் சூழலில்தான் எண்ணூரில் புதிய அனல்மின் நிலையத்தை அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் உழைக்கும் மக்கள் அடர்த்தியாக வாழும் வட சென்னைப் பகுதியின் சுற்றுச்சூழல் மேலும் மாசடைந்து அது வாழத் தகுதியற்ற இடமாகவே மாறிப்போகும். ஏற்கனவே இரண்டு பெரிய அனல் மின் நிலையங்கள் இருக்கும்பொழுது மேலும் புதிதாக அனல் மின் நிலையங்களை எண்ணூரில் அமைப்பது அப்பகுதி மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய அநீதியாகும்.

கார்பன் சமநிலையை அடைவதற்கான இந்தியாவின் இலக்கான 2070-க்கு முன்பாகவே தமிழக அரசு கார்பன் சம நிலையை எட்டும் என முதல்வர் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில் புதிய அனல்மின் நிலையங்களைத் துவக்குவது முதல்வரின் அறிவிப்பிற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாடாகும் என்பதை தமிழ்நாடு மின்சாரத்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசின் பொருளாதாரத்திற்கு நன்மை தரக்கூடிய புதுப்பிக்கத் தக்க ஆற்றலைக்கொண்டு மின்சாரம் தயாரிக்காமல், மீண்டும் நிலக்கரி அனல்மின் நிலையங்களை நிறுவுவது மக்களின் ஆரோக்கியத்தையும் இயற்கை வளத்தையும் அழிக்கும் செயலாகும். ஆகவே, உடனடியாக இத்திட்டத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்யவும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை வலியுறுத்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தை விசிக, மமக, தவாக, நாதக, அமமுக கட்சிகளின் தலைவர்களும், பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட சமூக அமைப்புகளின் தலைவர்களும் எழுதியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x