Last Updated : 18 Dec, 2024 06:02 PM

 

Published : 18 Dec 2024 06:02 PM
Last Updated : 18 Dec 2024 06:02 PM

30 ஆயிரம் மரங்களை நட்ட மூதாட்டி துளசி கவுடா காலமானார்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

துளசி கவுடா

பெங்களூரு: பத்மஸ்ரீ விருது பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் துளசி கவுடா (86) கர்நாடகாவில் உள்ள உத்தர கன்னடாவில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் அங்கோலாவை அடுத்துள்ள ஹொன்னள்ளியை சேர்ந்தவர் துளசி கவுடா (86). பழங்குடி வகுப்பை சேர்ந்த இவர், விவசாய கூலியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். கல்வி கற்கும் வாய்ப்பு இல்லாத போதும், சிறுவயது முதலே சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வமோடு இயங்கினார். கடலோர கர்நாடக மாவட்டங்களில் மண் சரிவை தடுக்க மரம் நடும் பணியில் ஈடுபட்டார். இதனால் கர்நாடக அரசு அவரை வனத்துறை தூதராக நியமித்தது.

துளசி கவுடா கடந்த 60 ஆண்டுகளாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்தார். பாரம்பரிய மரங்களை பாதுகாத்ததுடன், காடுகள் அழிவதை தடுக்க தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்ட அவர், அவ்வப்போது ஏற்படும் காட்டுத் தீயை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றினார்.

வனம் குறித்தும் மரங்கள் குறித்தும் அனைத்து தகவல்களையும் அறிந்து வைத்திருந்ததால் துளசி கவுடா,"வன கலைக்களஞ்சியம்" என பரவலாக அறியப்பட்டார். இதனால் கடந்த 2021ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது. அன்றைய தினம் காலில் செருப்பு அணியாமல் எளிமையான முறையில் நிகழ்ச்சிக்கு வந்த துளசி கவுடாவை அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நெகிழ்ச்சியோடு வணங்கினர்.

இந்நிலையில் உடல்நிலை நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த துளசி கவுடா திங்கள்கிழமை இரவு உத்தர கன்னடாவில் காலமானார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு நூற்றுக்கணக்கான மக்களும், அரசியல் கட்சியினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். துளசி கவுடாவின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்த கவுடா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “துளசி கவுடாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வளர்த்தார். நாட்டுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவர் வழிகாட்டியாக திகழ்வார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x