Published : 28 Nov 2024 07:21 PM
Last Updated : 28 Nov 2024 07:21 PM
தூத்துக்குடி: கடல் அரிப்பால் திருச்செந்தூர் கோயில் கடற்கரை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், பக்தர்கள் புனித நீராடுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் கோயில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடிய பிறகு, சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும், பவுர்ணமி நாட்களில் கோயில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திருச்செந்தூர் கோயில் கடற்கரை, அண்மைக்காலமாக கடல் அரிப்பால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சந்தோஷ மண்டபம் மற்றும் அய்யா வைகுண்டர் அவதார பதி பகுதியில், கடல்அரிப்பு ஏற்பட்டு பாதிப்படைந்த பகுதியில் ராட்சத கற்களைப் போட்டு பாதிப்பு சரி செய்யப்பட்டது.
தற்போது, கோயில் முன்புள்ள கடற்கரையில் கடந்த சில நாட்களாக அதிகளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால், கோயில் முன்புள்ள கடற்கரை பகுதியில் சுமார் 25 அடி நீளம், 10 அடி ஆழத்துக்கு கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், பக்தர்கள் கடற்கரையில் கோயில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் அதிகளவிலான பாறைகள் இருப்பதால் பக்தர்கள் புனித நீராட இயலாத சூழல் உள்ளது. இது குறித்து இயற்கை ஆர்வலர் வே.குணசீலன், ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: கடல் பகுதிகளில் நிலக்கரி இறங்குதளம், தூண்டில் வளைவு போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன.
ஒரு பகுதியில் இயற்கையை நாம் கட்டுப்படுத்த முயற்சித்தால், அது, அருகே உள்ள மற்றொரு பகுதியில் தனது ஆக்ரோஷத்தை காட்டும். அந்த வகையில் தான், அருகே உள்ள பகுதிகளில் நடைபெறும் தூண்டில் வளைவு, நிலக்கரி இறங்குதளம் போன்ற பணிகளால் திருச்செந்தூர் கடற்கரையில் அண்மைக் காலமாக கடல் சீற்றம் அதிகமாகி கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், கடலில் பக்தர்கள் புனித நீராட முடியாத நிலை உருவாகி வருகிறது.
கடலில் நீராடும் பக்தர்கள், பாறைகளில் மோதி காயமடையும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூர் கோயிலில் தற்போது ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த பணிகளிலேயே கோயில் கடற்கரை பகுதியில் பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். கடல் சீற்றத்தில் இருந்து திருச்செந்தூர் கோயில் கடற்கரை பாதுகாக்க முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், பக்தர்கள் ஆபத்தில் சிக்காமல் தடுக்க கடற்கரை பகுதியில் எச்சரிக்கை பலகைகளையும் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT