Published : 25 Nov 2024 07:13 PM
Last Updated : 25 Nov 2024 07:13 PM
குமுளி: சபரிமலை சீசன் தொடங்கியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான குரங்குகள் வனத்தில் இருந்து மலைச் சாலைக்கு இடம்பெயர்ந்துள்ளன. குரங்குகளுக்கு உணவளிப்பதை் தடுக்க வனத் துறை சார்பில் ரோந்தும் கண்காணிப்பும் மும்முரப்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் அமைந்துள்ளது. இதில் மாவட்ட எல்லையான குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு, குட்டிக்கானம், முண்டக்காயம்,எரிமேலி உள்ளிட்ட பகுதிகள் அடர் வனப்பகுதிகளாகவே உள்ளன. ஆண்டு முழுவதும் இப்பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் சென்று கொண்டிருக்கும். இதில் வருபவர்கள் சில நேரங்களில் வனச்சாலையில் நின்று இயற்கையை ரசிப்பது உண்டு. அப்போது அங்கிருக்கும் குரங்களுக்கு பழம் உள்ளிட்டவற்றை வழங்குவர்.
இந்த பழக்கத்துக்கு உட்பட்ட பல குரங்குகள் குமுளி உள்ளிட்ட பல்வேறு மலைப்பாதையிலே முகாமிட்டிருப்பது வழக்கம். இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக இந்த வழித்தடத்தில் தமிழகம் மட்டுமல்லாது, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களின் வாகனங்கள் அதிகளவில் சென்று கொண்டிருக்கின்றன.
மேலும் பாதயாத்திரை வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் வெகுவாய் உயர்ந்துள்ளது. இப்பாதைகளில் நீண்டவரிசையில் குழு, குழுவாக ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். கூடுதல் மனித நடமாட்டத்தைக் கண்டதும் ஏற்கனவே கிடைத்த உணவுகளின் அடிப்படையில் குரங்குகள் இப்பகுதிக்கு அதிகளவில் இடம்பெயர்ந்து வந்துள்ளன. சாலையோர மரக்கிளைகள், தடுப்புச்சுவர் போன்றவற்றில் அமர்ந்து உணவுக்காக காத்திருக்கின்றன.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ''சபரிமலை சீசன் தொடங்கியதில் இருந்து நூற்றுக்கணக்கான குரங்குகள் வனத்தில் வெளியேறி சாலையில் முகாமிட்டுள்ளன. இதற்கு எவ்வித உணவும் கொடுக்கக் கூடாது என்று பக்தர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் சுற்றுலா வாகனங்களில் செல்பவர்களையும் கண்காணிக்கும் வகையில் இச்சாலையில் அடிக்கடி ரோந்து சென்றுவருகிறோம். மலைச்சாலையில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT