Published : 22 Nov 2024 09:25 PM
Last Updated : 22 Nov 2024 09:25 PM
சென்னை: சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சிமலையின் 33 வட்டாரங்களை இணைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: “மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை மத்திய அரசு கைவிட்ட நிலையில், மலைப்பகுதிகளை கண்காணிக்கும் நோக்கில், கடந்த 2015-16ம் ஆண்டு சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம், அந்தந்த பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, இடதுசாரி பயங்கரவாதத்துக்கு வாய்ப்புள்ள பகுதிகளை கண்காணிக்கவும் உதவுகிறது.
இதன் அடிப்படையில், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களுக்காக ஆண்டுக்கு ரூ.75 கோடி ஒதுக்கப்படுகிறது. இத்துடன், நெல்லையில் இருந்து பிரிக்கப்பட்டு புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டமும் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம், 100 சதவீதம் நிதி பங்களிப்பில் அப்பகுதி மலைகளின் இயற்கை சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2023-24-ம் ஆண்டுக்கான துறையின் மானிய கோரிக்கையின் போது, நிதித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில்,‘‘ சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையும் இணைக்கப்படும்’’ என்று கூறியிருந்தார். சாதாரண பட்ஜெட் ஒதுக்கீட்டுக்குள் வராத சூழலியல் சார்ந்த மலைப் பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட மலைவாழ் மக்களுக்கு தேவையான சிறப்பு உதவிகள் வழங்கும் வகையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து, ஊட்டியில் உள்ள சிறப்பு பகுதிகள் மேம்பாட்டுத்திட்ட இயக்குனர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், 14 கிழக்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களைச் சேர்ந்த 82 வட்டாரங்களை இணைக்க கருத்துரு அனுப்பினார். இந்த கருத்துரு, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் தரவுகள் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, எந்த வட்டாரங்களை சேர்ப்பது என்பது முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி கவனமாக பரிசீலிக்கபப்பட்டு, 11 கிழக்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் உள்ள 33 வட்டாரங்களை இணைப்பது என முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் தர்மபுரி- 5, கிருஷ்ணகிரி- 7, கள்ளக்குறிச்சி-1, நாமக்கல்-3, திண்டுக்கல்-2, ஈரோடு-1. சேலம்-4, திருப்பத்தூர்-5, திருவண்ணாமலை-1, திருச்சிராப்பள்ளி- 2, வேலூர்-2 ஆகிய மாவட்டங்களில் உள்ள 33 வட்டாரங்களை இத்திட்டத்தில் சேர்த்துள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment