Published : 22 Nov 2024 05:56 PM
Last Updated : 22 Nov 2024 05:56 PM

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 70 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றியது வனத்துறை

வனத்துறை சார்பில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வசித்து வந்தவர்களுக்கு செம்மஞ்சேரியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.

சென்னை: பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 70 வீடுகளை வனத்துறை சார்பில் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

சென்னை மாநகரில் எஞ்சி இருக்கும் சதுப்பு நிலமாக பள்ளிக்கரணை உள்ளது. இதன் பரப்பளவு 698 ஹெக்டேராக சுருங்கிவிட்டது. இது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் 190 வகையான பறவை இனங்கள், 10 வகையான பாலூட்டி இனங்கள், 21 வகையான ஊர்வன இனங்கள், 10 வகையான நீர், நில வாழ்வன, 50 வகையான மீன் இனங்கள், 14 வகையான வண்ணத்துப்பூச்சிகள் 29 வகையான புல் இனங்கள் உள்ளிட்ட 164 வகையான தாவரங்கள் என மொத்தம் 459 வகையான விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் கொண்ட சூழல் செரிந்த பகுதியாக பள்ளிக்கரணை உள்ளது.

இந்நிலையில், மீதம் உள்ள பகுதியை பாதுகாக்கும் வகையில் வனத்துறை சார்பில் ரூ.21 கோடியே 67 லட்சத்தில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியை ஆக்கிரமித்துள்ள குடியிருப்புகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீர்நிலையை ஆக்கிரமித்துள்ள கட்டிடங்களை அகற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் சார்பில் தொடரப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் பசுமை தீர்ப்பாயமும், பள்ளிக்கரணையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அங்கு மகாலட்சுமி நகர் பகுதியில் 70 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன. அதே பகுதியில் நீண்ட காலமாக வசித்து வந்ததற்கான ஆவணங்கள் வைத்துள்ள 47 குடும்பங்களுக்கு செம்மஞ்சேரியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதில் பயனாளி பங்கு தொகை தலா ரூ.6 லட்சத்து 5 ஆயிரத்தையும் அரசு வழங்கியுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ள குடும்பங்களுக்கு வனத்துறை சார்பில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு, ஆக்கிரமிப்பு வீடுகளை அவர்களாகவே அகற்றிக்கொள்ளுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், 47 குடும்பங்களும் வெள்ளிக்கிழமை செம்மஞ்சேரியில் மறுகுடியமர்வு செய்யும் பணி தொடங்கியது. வனத்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகள் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன. வீடு கிடைக்காத 23 குடும்பத்தினர், தங்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x