Published : 18 Nov 2024 04:42 PM
Last Updated : 18 Nov 2024 04:42 PM

கோடியக்கரையில் களைகட்டும் சீசன்... குவியும் வெளிநாட்டு பறவைகள்!

நாகப்பட்டினம்: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த அரியவகை பறவைகள் பல்லாயிரக்கணககில் வந்து குவிந்துள்ளன நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பரந்துவிரிந்த இந்த பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை காலமான அக்டோபர் மாதம் பறவைகள் வரத் தொடங்கும். மார்ச் மாதம் வரை பறவைகள் இங்கு தங்கியிருக்கும்.

ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு வந்து இளைப்பாறும். கடந்த கால கணக்கெடுப்புகளின்படி 294-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கு வந்து செல்கின்றன. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தற்போது கோடியக்கரை பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் எங்கும் மழைநீர் தேங்கி உள்ளது.

இதனால், பறவைகள் அதிகம் வரத் தொடங்கியுள்ளன. செங்கால்நாரை, கூழைகிடா, பூநாரை, கடல்காகம், கடல்ஆலா, உள்ளான், வரி தலைவாத்து, சாம்பல் உப்புக்கொத்தி, கருவால் மூக்கன், பட்டைவால் மூக்கன், பச்சைக்கால் உள்ளான், கருப்புக்கால் உருண்டை உள்ளான், கரண்டி மூக்கன், வெண்கொக்கு, நீர் காகம், மீசை ஆலா, பருத்த அலகு ஆலா, ஊசிவால் வாத்து, தட்டை அலகு வாத்து உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வகை பறவைகள் இங்கு வந்து குவிந்துள்ளன.

இதில், இந்த ஆண்டு கூனி அரிச்சான் பறவை வந்திருப்பது பறவை ஆர்வலர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் வந்து கொண்டிருந்த கூனி அரிச்சான், 30 ஆண்டுகளாக கோடியக்கரைக்கு வரவே இல்லை.

இந்நிலையில், கூனி அரிச்சான் இந்த ஆண்டு அதிக அளவில் கோடியக்கரைக்கு வந்துள்ளதால், 30 ஆண்டுகளுக்கு பிறகு அந்த பறவைக்கு இதமான சூழல் கோடியக்கரையில் நிலவுவதாக கருதப்படுகிறது. ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் இந்த பறவைகள் 10,000 மைல்களை கடந்து கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வந்துள்ளன.

அதேபோல கண்ணாடி உள்ளான் என்று அழைக்கப்படும் பெயிடு அவாசிக் என்ற உள்ளான் வகை பறவைகள் கோடியக்கரை சரணாலயத்துக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ளன. கருப்பு வெள்ளை நிறத்தில் காணப்படும் இந்த பறவைகள் சதுப்பு நிலப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன.

இப்பறவை நிலத்திலும் நீரிலும் வசிக்கக் கூடியது. தற்போது, கோடியக்கரையில் பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதால் இந்த ஆண்டு கூட்டம், கூட்டமாக பறவைகள் வந்துள்ளன. இரட்டைத்தீவு, கோவைதீவு, நெடுந்தீவு, பம்புஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகம் இந்த பறவைகள் கூட்டமாக காணப்படுகின்றன. அவை திடீரென ஒருசேர சிறகடித்து பறப்பது பார்ப்பவர்களை சிலிர்க்கவும் மெய்மறக்கவும் வைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x