Published : 18 Nov 2024 03:41 PM
Last Updated : 18 Nov 2024 03:41 PM
சென்னையில் ஆண்டுதோறும் 100 செமீக்கும் அதிகமாக மழை கிடைத்தாலும், அது நிலத்தடிநீராக மாறுவதில்லை. இதனால் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட அடுத்த ஆண்டே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மழைநீரை நிலத்தடி நீராக மாற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம் அக்கறை காட்டுவதில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, கிடைக்கும் மழைநீரை குளங்களுக்கு கொண்டு சென்று நிலத்தடிநீராக செறிவூட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக வட சென்னை, கொடுங்கையூரில், 34-வது வார்டு, யூனியன் கார்பைடு காலனியை சேர்ந்த, எவரெடி நகர் மக்கள் பொதுநலச்சங்க செயலாளர் எஸ்.முருகப்பன் கூறியதாவது: கடந்த அக்டோபர் 15-ம் தேதி பெய்த ஒரு நாள் மழைக்கே எங்கள் பகுதியில் பல தெருக்களில் மழைநீர் சூழ்ந்து, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து 1 அடி உயரத்துக்கு தேங்கியது. இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் வீடுகளை விட்டு வெளியேறி, மழைநீர் வடிந்த பிறகே, வீடுகளுக்கு திரும்பினர்.
ஆனால் எங்கள் பகுதியில் உள்ள, யூனியன் கார்பைடு பணியாளர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட 3 ஆயிரத்து 568 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட திறந்தவெளி நிலம் உள்ளது. இதில் மாநகராட்சி நிர்வாகம் பெரிய குளம், பூங்கா, நடைபாதை ஆகியவற்றை அமைத்துள்ளது. குளம் தூர்வாரி செம்மைப்படுத்தப்பட்டது. குளத்துக்கு நீர் வரத்து குழாய்களும் அமைக்கப்பட்டன. எங்கள் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து அவதிப்பட்ட நிலையில், இந்த குளத்துக்கு முறையாக மழைநீரை கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் வழிவகை செய்யவில்லை.
இதனால் குளத்தில் மிக மிக குறைந்த அளவு நீரே உள்ளது. அடுத்த மழை தொடங்குவதற்கு முன்பாக, எங்கள் பகுதியில் பெய்யும் மழைநீரை குளத்துக்கு கொண்டு சென்று நிலத்தடி நீராக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, குளத்துக்கு மழைநீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT