Published : 15 Nov 2024 08:40 PM
Last Updated : 15 Nov 2024 08:40 PM
மதுரை: தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு, தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நெல்லை தாமிரபரணி ஆற்றின் படித்துறைகள், மண்டபங்களை சீரமைக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் தடுக்கவும் கோரி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தாமிரபரணியில் கழிவுநீர் கலந்தால் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் நவ.10ல் தாமிரபரணி ஆற்றில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் கழிவுநீர் கலப்பதை உறுதி செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதிடுகையில், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக இந்த திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு, ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என்றார்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தாமிரபரணி ஆற்றில் ஆங்காங்கு மண் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஆற்று நீரில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக கழிவுநீர் கலந்து இருந்தது பரிசோதனையில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது எனக் கூறப்பட்டு இருந்தது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் விவகாரத்தில் அவ்வப்போது தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும், விசாரணை நவ.25-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT