Published : 12 Nov 2024 08:47 PM
Last Updated : 12 Nov 2024 08:47 PM
திருப்பத்தூர்: பாலாற்றை மீட்டெடுக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு மதிப்பளித்து, பாலாறு பாதுகாப்பு கூட்டியிக்கத்தினர் வாணியம்பாடி சந்தைமேட்டில் ‘பிளக்ஸ் பேனர்’ வைத்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
கடந்த 1903-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் வாணியம்பாடி பாலாற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். அதன் நினைவாக வாணியம்பாடி சந்தைமேட்டில் உயிரிழந்த மக்களுக்காக ஆங்கிலேயர்கள் வைத்த நினைவு தூணுக்கு ஆண்டு தோறும் நவம்பர் 12-ம் தேதி நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி, நவம்பர் 12-ம் தேதியான இன்று நினைவு தூணுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில், வாணியம்பாடி சந்தைமேட்டில் உயிரிழந்த மக்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவு தூணுக்கு எதிரே ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாலாற்றை மீட்டெடுக்கவும், பாலாற்றில் நடந்து வரும் மணல் திருட்டு, ஆற்றில் கலக்கப்படும் ரசாயனக் கழிவுகளால் மாசடைந்து வரும் பாலாறு, மழை வெள்ளம் வரும்போது ரசாயனக்கழிவுகளால் நுரையுடன் பொங்கி வரும் தண்ணீர், பாழடைந்துள்ள பாலாற்றை மீட்க அரசு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அவ்வப்போது செய்தி வெளியிட்டு வந்தது.
இந்த செய்திகளைத் தொகுத்து ஒன்றிணைந்த பாலாறு பாதுகாப்பு கூட்டியிக்கத்தினர், அவைகளை ‘மெகா டிஜிட்டல் பேனராக’ அச்சடித்து அதை வாணியம்பாடி சந்தைமேட்டில் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்காக நிறுவனப்பட்ட நினைவு தூணுக்கு எதிராக வைத்தது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது.
இது குறித்து பாலாறு பாதுகாப்பு கூட்டியிக்கத்தினர் கூறியதாவது,‘‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல சமூக பொறுப்புள்ள செய்திகளை வெளியிட்டு வருவதை போல பாலாற்றை மீட்டெடுக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது எங்களுக்கு பெரும் ஊக்கமளித்தது. இந்து தமிழ் திசை நாளிதழில் பாலாறு தொடர்பாக வெளியாகும் கட்டுரைகள், சிறப்பு செய்திகள், பாலாறு குறித்த வரலாறு ஆகியவற்றை நாங்கள் படித்தது மட்டும் அல்ல அதை ஆவணப்படுத்தியும் வருகிறோம். அதன் வெளிப்பாடாக தான் இந்த ‘பிளக்ஸ் பேனரை’ நாங்கள் இங்கு வைத்தோம்.
பாலாறு எவ்வளவு முக்கியும், அதை மீட்டெடுத்தால் என்னென்ன நம்மைகள் நமக்கு வரும் என்பதை பொதுமக்களும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான செய்திகளை ஒன்றிணைந்து டிஜிட்டல் பேனராக அச்சடித்து இங்கு வைத்துள்ளோம். இதற்கு பொதுமக்களும் பெரும் வரவேற்பை அளித்து எங்களை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது. பாலாற்றை மீட்டெடுக்க ஊடகங்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT