Published : 10 Nov 2024 06:27 PM
Last Updated : 10 Nov 2024 06:27 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டத்தில் நடுக்கடலில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் வலையில் சுமார் 800 கிலோ எடை கொண்ட அரிய வகை கடற்பசு சிக்கியது. பின்னர் வனத்துறையினரின் அறிவுறுத்தலின்பேரில் நல்ல நிலையில், உயிருடன் கடற்பசுவை மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் விட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 மீனவர்கள் இன்று அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது மீனவர் செல்லத்துரைக்கு சொந்தமான வலையை கடலில் விரித்து மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது சுமார் 800 கிலோ எடை கொண்ட 8 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்ட அரிய வகை கடற்பசு ஒன்று சிக்கியது.
உடனே அந்த கடற்பசுவை கண்ட மீனவர்கள் இது குறித்து பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வனச்சரக அலுவலர் சந்திரசேகர், வனவர் சிவசங்கர் மற்றும் வனத்துறையினர், கீழத்தோட்டத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின் பேரில், மீனவர்களுக்கு ஆலோசனையும், அறிவுரையும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மீனவர்கள் வனத்துறையினரின் அறிவுறுத்தலின்பேரில் மீண்டும் நல்ல நிலையில் கடலுக்குள் கடற்பசுவை விட்டனர். கடல்பசுவை மீட்டு உயிருடன் விட்ட மீனவர்களை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் சந்தன மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், வனத்துறையினர் சார்பில் விரைவில் விழா நடத்தி மீனவர்கள் கவுரவிக்கப்படுவார்கள் எனவும், ரொக்கப்பரிசு வழங்கப்படும் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT