Last Updated : 02 Nov, 2024 05:13 AM

 

Published : 02 Nov 2024 05:13 AM
Last Updated : 02 Nov 2024 05:13 AM

புதுப்பொலிவு பெறும் திருக்கழுக்குன்றம் குளங்கள்: நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த சீரமைப்பு தீவிரம்

தூர்வாரி சீரமைக்கப்பட்ட வண்ணான் குளம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி சீரமைக்க பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நீர் நிலைகளின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் மற்றும் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் சரியான திட்டங்களுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில், நிலத்தடி நீர் ஆதாரமாக 15-க்கும் மேற்பட்ட குளங்கள் அமைந்துள்ளன. இவற்றை, முறையாக பராமரிக்காத காரணத்தால் குளங்கள் தூர்ந்ததால், கடந்த 2014-ம் ஆண்டு நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் சரிந்தது. மேலும், அப்போது போதிய மழையில்லாததால் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியின் 50 சதவீத குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த பாலாறும் வறண்டது. இதனால், நகரப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் டிராக்டர் மூலம் தலா ஒரு குடும்பத்துக்கு 2 அல்லது 4 குடங்களில் குடிநீர் வழங்கும் நிலை ஏற்பட்டது. பின்னர், மழைப்பொழிவு ஏற்பட்டதால் நிலைமை சீரடைந்தது. இதனால், பேரூராட்சியின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்பேரில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு குடிநீர்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கடந்த 2023-ம் ஆண்டு பேரூராட்சி பகுதியில் உள்ள ராட்சத குடிநீர் குழாய்களை சீரமைப்பதற்காக அம்ரூத் திட்டத்தில் ரூ.29.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நகரப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரங்களாக உள்ள 15-க்கும் மேற்பட்ட குளங்களை சீரமைக்கும் பணிகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதில், முதற்கட்டமாக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் வண்ணான் குளத்தை சீரமைக்க ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம், குளத்தை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கரைகளில் மின்விளக்குகள் அமைத்து அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், முற்றிலும் புதுப்பொலிவுடன் ரம்மியமாக காட்சியளிக்கிறது குளம்.

இதேபோல், 15-வது நிதிக்குழு மூலம் சுண்ணாம்பு மற்றும் வாளை குளத்தை சீரமைக்க தலா ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சேரன் குளத்தை சீரமைக்க ரூ.17 லட்சம் செலவில் பணிகள்மேற்கொள்ளப்பட்டு முழுவதும் நிறைவடைந்துள்ளன. அதேபோல், அம்ருத் 2.0 திட்டத்தில் தொண்டனார் தீர்த்த குளத்தை சீரமைக்க ரூ.69 லட்சம் மற்றும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் வெள்ளக்குளத்தை சீரமைக்க ரூ.70 லட்சம், ஆண்டு அரசன் குளத்துக்கு ரூ.59 லட்சம் மற்றும் நகரின் நடுவே அமைந்துள்ள இந்திர தீர்த்த குளத்தை சீரமைக்க ரூ.92 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட குளங்கள் முற்றிலும் சீரமைக்கப்பட்டால், நகரின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு மட்டுமின்றி குளங்கள் புதுப்பொலிவுடன் பிற பேரூராட்சிகளுக்கு முன் உதாரணமாக திகழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும்,குளக்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நீலைகளை பாதுகாக்க வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தேசுமுகிப்பேட்டையை சேர்ந்த விவேகானந்தன் கூறியதாவது: திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் கடந்த காலங்களில் மழைப்பொழிவு இல்லாததால் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மீண்டும் இவ்வாறான நிலை ஏற்படக்கூடாது என்ற வகையில், குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும், பேரூராட்சி பகுதி மட்டுமின்றி பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கும் நீர் நிலைகளையும் தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சீரமைப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ள மேற்கண்ட குளங்களின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் கலப்பதை தடுக்க நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், நீர் வரத்து கால்வாய்கள் மற்றும் உபரிநீர் வெளியேறும் கால்வாய்களும் முறையாக சீரமைக்க வேண்டும். அதேபோல், நகரின்மையப்பகுதியில் நீண்ட காலமாக தூர்வாரப்படாமலும் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியும் உள்ள லட்சுமி தீர்த்த குளத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் து.யுவராஜ் கூறியதாவது: பேரூராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, நிதி ஒதுக்கப்பட்டுள்ள குளங்களில் வண்ணான்குளம் மற்றும் சேரன் குளத்தின் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனை முன்மாதிரியாக கொண்டு மற்ற குளங்களிலும் விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. குளக்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மிகவும் சவாலான செயலாக உள்ளது. அதேபோல், கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணியும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால், இப்பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள உள்ளோம். மேலும், சீரமைப்பு பணிகள் நிறைவுபெற்றதும் கரைகளில் மரக்கன்றுகள் நடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. பேரூராட்சியின் பிற பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் கலப்பதை தடுக்க மக்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x