Last Updated : 24 Oct, 2024 04:55 PM

 

Published : 24 Oct 2024 04:55 PM
Last Updated : 24 Oct 2024 04:55 PM

தென்னிந்தியாவில் முதல் முறையாக ‘கழுகு’களை ‘கண்’காணிக்க ஜிபிஎஸ்!

ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட கழுகு. (மாதிரி படம்)

கோவை: தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் பாறு கழுகுகளை பாதுகாக்கும் அம்சமாக கழுகுகளுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பரவலாக காணப்பட்ட கழுகுகளின் எண்ணிக்கை 1990-களில் திடீரென சரியத் தொடங்கியது. இறந்த கால்நடைகளை உண்ணும் கழுகுகள் பல ஆயிரக்கணக்கில் இறந்தன. இதுகுறித்த ஆராய்ச்சியில், கால்நடைகளுக்கான வலி நிவாரணியான ‘டைக்ளோபினாக்’ மருந்து அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 2006-ல் ‘டைக்ளோபினாக்’ மருந்து கால்நடை மருத்துவப் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. கால்நடைகளின் வலிநிவாரணிக்கு மாற்று மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. கடந்த 2022-ல் கழுகுகளை பாதுகாக்கும் வகையில் மாநில அளவிலான பாறு கழுகு பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு பாறு கழுகு பாதுகாப்புக்கான செயல்திட்டத்தை தயாரித்து வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் பாறு கழுகுகளை பாதுகாக்கும் வகையில் கழுகுகளுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பாறு கழுகுகள் ஆய்வில் ஈடுபடும் 'அருளகம்' அமைப்பின் செயலர் பாரதிதாசன், ஆய்வாளர் சர்மா ஆகியோர் கூறியதாவது: இந்தியாவைப் பொருத்தவரை 9 வகை கழுகுகள் உள்ளன. தமிழகத்தில் மஞ்சள் முகப்பாறு, வெண்முதுகுப் பாறு, கருங்கழுத்துப் பாறு, செம்முகப் பாறு ஆகிய நான்கு வகைகள் உள்ளன.

தமிழகத்தில் முதுமலை, மாயாறு பகுதிகள் இவ்வகை கழுகுகளின் வாழ்விடமாக உள்ளன. பாறு கழுகுகள் இறந்த கால்நடைகள், விலங்குகளை தின்று சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தி காட்டில் உள்ள பிற விலங்குகளையும் தொற்று நோய்களில் இருந்து காத்து சூழல் சமநிலை பேணுவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

தமிழகத்தில் பாறு கழுகுகள் பாதுகாப்புக்கு செயல்திட்டம் வகுப்பதற்கு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. கழுகு பாதுகாப்பின் ஓர் அம்சமாக, தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக கழுகுகளுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வனத்துறையிடம் அனுமதி கோரியுள்ளோம்.

பறவைகளுக்கான பாதுகாப்பு ராயல் சொசைட்டி அமைப்பின் உதவியுடன் இது செயல்படுத்தப்படும். குறிப்பாக, அதிக எண்ணிக்கையில் வசித்துவரும் வெண்முதுகுப் பாறு, கருங்கழுத்துப் பாறு, செம்முகப் பாறு ஆகிய மூன்று வகை கழுகுகளுக்கு ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்தி கண்காணிக்க உள்ளோம்.

வனத்துறை அனுமதி கிடைத்தவுடன், வனத்துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் கழுகுகளை பிடித்து ஜி.பி.எஸ். கருவி பொருத்தி வனப்பகுதியில் விடப்படும். பின்னர் அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து அதன் வாழ்விட சூழலை அறிய உள்ளோம். இதற்காக தானாக சார்ஜ் செய்து கொள்ளும் தானியங்கி சோலார் அமைப்பு பொருத்திய ஜி.பி.எஸ். கருவி கழுகின் முதுகில் பொருத்தப்படும். ஏற்கெனவே வெளிநாடுகளிலும், வடமாநிலங்களிலும் இந்த முறையில் கழுகுகள் கண்காணிப்பு செய்யப்பட்டு தரவுகள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x