Published : 19 Oct 2024 03:27 PM
Last Updated : 19 Oct 2024 03:27 PM

அழிவின் விளிம்பில் அரிய வகை முதலையும், நடன தவளையும்!

முதுமலை: வன வளம் நிறைந்த நீலகிரி மாவட்டத்தின் முதுமலை புலிகள் காப்பகம், பல்வேறு அரியவகை உயிரினங்களின் மிகமுக்கிய வாழ்விடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. புலிகள், யானைகள் மட்டுமின்றி வரிக்கழுதைப் புலிகள், பிணந்தின்னி கழுகுகள் போன்ற அரியவகை உயிரினங்களின் கடைசி புகலிடமாக முதுமலை காடு விளங்குகிறது.

நீலகிரி பல்லுயிர் பெருக்க மண்டலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஆய்வாளர்களால் அறியப்படும் முதுமலையில், புலிகள் முதல் வண்ணத்துப்பூச்சி வரை ஒவ்வோர் உயிரினத்துக்கும் முக்கியத்துவம் அளித்து, கணக்கெடுப்புகளை நடத்தி வருகின்றனர். இந்த கணக்கெடுப்புகள் மூலமாக, குறிப்பிட்ட வகை உயிரினங்களின் எண்ணிக்கை மட்டுமின்றி அவற்றின் தற்போதைய தகவமைப்பு, அச்சுறுத்தல், உணவு முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் கண்டறிய முடிகிறது.

இதன் தொடர்ச்சியாக, முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதிகளிலுள்ள நீர், நில வாழ்வுகள் மற்றும் ஊர்வனங்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது. கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் உயரத்திலுள்ள கல்லம்பாளையம் முதல் 2000 மீட்டர் உயரம் வரை உள்ள சோலூர் வரையிலான பகுதிகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ், துணை இயக்குநர் அருண் ஆகியோர் தலைமையில் ஊர்வன வல்லுநர்களான சுஜித் கோபாலன், செர்ஜின் ஜோயல் அடங்கிய 15 வல்லுநர்கள் மற்றும் வனத் துறையினர் கல்லம்பாளையம், விபூதி மலை, தெங்கு மரஹாடா உள்ளிட்ட வனப்பகுதிக்குள் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில், இந்த வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்படாத புதிய ஊர்வன உயிரினங்களை வல்லுநர் குழு கண்டறிந்தது.அதில் கேவ்டான்சிங் ஃப்ராக் என்ற தவளை, ஸ்ட்ரிப்புடு கோரல் ஸ்நேக், மலபார் பிட் வைப்பர் உள்ளிட்ட பாம்புகள்மற்றும் தவளை இனங்கள் கண்டறியப்பட்டன.

ஊர்வன குறித்து ஆய்வாளர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தன்னார்வலர்கள்மற்றும் வனத்துறையினர் இணைந்து 3 நாட்கள் மேற்கொண்ட இந்த கணக்கெடுப்பில், 36 வகையான இரு வாழ்வுகள்‌ மற்றும் 33 வகையான ஊர்வனவற்றை‌ முதல் முறையாக பதிவு செய்துள்ளனர். மேலும், முதுமலையில் மொத்தம் 55 வகையான ஊர்வன மற்றும் 39 வகையான இரு வாழ்விகள் உள்ளதை கண்டறிந்துள்ளனர்.

இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் கூறும்போது, "கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் உயரத்திலுள்ள கல்லம்பாளையம் முதல் 2000 மீட்டர் உயரம் வரையுள்ள சோலூர் வரையிலான பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட உயிரினங்களில் 21 இனங்கள்அழியும் பட்டியலில் உள்ளவை. மேலும், அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலிலுள்ள கேவ் டான்சிங் ஃபிராக் எனப்படும் நடன தவளை, இன்டர்நெய்ல் நைட் ஃபிராக் போன்ற இரு வாழ்விட தவளைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, அழியும் நிலையில் உள்ள எண்டெமிக் ஸ்டார் ஐட் புஷ் ஃபிராக், நீலகிரி எண்டமிக் குன்னூர் புஷ்பிராக், நீலகிரி புஷ் ஃபிராக், நீலகிரிஸ் வார்ட் ஃபிராக் ஆகியவையும் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர எண்டமிக் ஸ்டிரைப்டு கோரல் ஸ்நேக், கிங்கோப்ரா, மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள மலபார் பிட் வைப்பர், தி கலமரியா ரீட் ஸ்நேக், எண்டமிக் பரோவிங் ஸ்நேக், பெரோடெட் மலைப்பாம்பு, நீலகிரி டிவார்ப் கெக்கோ, கிரேஸ்புல்டே கெக்கோ உள்ளிட்ட ஊர்வன வகைகளும் பதிவு செய்யப்பட்டன. இந்த கணக்கெடுப்பில் அதிக எண்ணிக்கையிலான ஆற்றுநீர் முதலைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பு, இவற்றை அழிவில் இருந்து பாதுகாக்க பெரும் உதவியாக இருக்கும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x