Published : 19 Oct 2024 01:26 PM
Last Updated : 19 Oct 2024 01:26 PM

சென்னை மாநகர சாலை தடுப்புகளில் 12 ஆயிரம் மலர்  செடிகளை நடும் பணி தொடக்கம்

சென்னை மாநகர சாலை தடுப்புகளில் நடப்பட்டு வரும் மலர்ச்செடிகள்.

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை மாநகர சாலை தடுப்புகளில் 12 ஆயிரம் மலர் செடிகளை நடும் பணியை வனத்துறையுடன் இணைந்து மாநகராட்சி தொடங்கியுள்ளது.

தமிழகம் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேறி இருந்தாலும், மாநில தலைநகர் சென்னை திடக்கழிவு மேலாண்மையில் பின்தங்கியே உள்ளது. அதனால் சென்னை மாநகரத்தை பொலிவுறச் செய்யும் வகையில் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், தீவிர தூய்மைப் பணி, இரவு நேர தூய்மைப் பணி, பூங்காக்களில் தீவிர தூய்மைப் பணி, பேருந்து நிழற்குடைகளில் தூய்மைப் பணி, சுவரொட்டிகளை அகற்றுதல், சாலையோரம் நீண்ட காலமாக நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக மாநகர சாலைகளில் உள்ள தடுப்புகளில் மலர்ச்செடிகளை நட்டு, மாநகரை வண்ணமயமாக்கி, கண்களுக்கு விருந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வனத்துறை உதவியுடன் 10 ஆயிரம் மலர்ச்செடிகளை நட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்காக பல்வேறு நர்சரிகளில் மலர்ச் செடிகளை சேகரிக்கும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வந்தது. குறிப்பாக, பாரிஜாதம், பவளமல்லி, மகிழம், மந்தாரை உள்ளிட்ட 12 வகையான மலர்ச்செடிகளை சாலைத் தடுப்புகளில் நட திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தினமும் சென்னை மாநகரில் மழை பெய்து வருகிறது. இப்போது செடிகளை நட்டால் அவற்றுக்கு இயற்கையாகவே நீர் கிடைக்கும், பராமரிப்புச் செலவும் குறையும். இதனால் சாலை தடுப்புகளில் மலர் செடிகளை நடும் பணியை வனத்துறையுடன் இணைந்து மாநகராட்சி தொடங்கியுள்ளது. இப்பணிகளை நவ.15-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் 12 ஆயிரம் மலர்ச்செடிகளை நட இருப்பதாக மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x