Published : 10 Oct 2024 03:50 PM
Last Updated : 10 Oct 2024 03:50 PM

கூடலூர் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் யானைகளை கண்காணிக்கும் ‘ஏஐ’

கூடலூர் வனக்கோட்டம் ஓவேலி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கேமரா.

கூடலூர்: இந்தியாவில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் ஏற்படும் பகுதிகளில், நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் முக்கிய இடத்தில் இருக்கிறது. காடு அழிப்புகளால் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவே, அவற்றை தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் நுழைகின்றன. அப்போது, மனிதர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால், மனித உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேவேளையில், மின்வேலி, திறந்தவெளி கிணறுகள் உள்ளிட்ட மனித தவறுகளால், யானைகள் உயிரிழப்பும் நிகழ்கின்றன. யானை - மனித எதிர்கொள்ளல்களை தடுக்க, கூடலூரில் வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், பிரச்சினைக்கான தீர்வு கிடைத்த பாடில்லை. இந்நிலையில், ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை கண்காணித்து, எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்பும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் ஒன்றான கூடலூர் வனக்கோட்டம் ஓவேலி பகுதியில், முதல்கட்டமாக 5 செயற்கை நுண்ணறிவு கேமராக்களைப் பொருத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக கூடலூர் வனக்கோட்ட அதிகாரிகள் கூறும்போது, "ஊருக்குள் நுழையும் யானைகளைக் கண்காணிக்க, ஏற்கெனவே சிறப்பு வனக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி முறையில் கிராம மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட வட்டப்பாறை, நியூஹோப், பாரம், தர்மகிரி, இந்திரா நகர் ஆகிய 5 இடங்களில், இந்த செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சூரியசக்தி மின்சக்தியில் இயங்கும் இந்த கேமராக்கள், பொருத்தப்பட்ட பகுதியிலிருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிராம மக்கள் பயன்படுத்தும் 300 செல்போன்களுடன் இணைக்க முடியும். இப்பகுதிகளை யானைகள் கடக்கும்போது, அதுகுறித்த குறுஞ்செய்தியை இணைப்பில் உள்ள அனைத்து செல்போன்களுக்கும் தானியங்கி கேமரா அனுப்பிவைக்கும். இதன்மூலமாக, மக்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும்.

வனத்துறைக்கு தகவல் கிடைத்ததும், அந்த பகுதியிலிருந்து யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட முடியும். பிரத்யேகமாக யானைகளின் நடமாட்டம் குறித்து தகவல் அனுப்புவதற்கு மட்டுமே இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலமாக, யானைகள் அப்பகுதிக்கு வந்துள்ளதை தெரிந்துகொண்டு, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பதோடு தங்கள் உயிர், உடைமைகளையும் பாதுகாத்து கொள்ள முடியும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x