Last Updated : 08 Oct, 2024 05:53 PM

 

Published : 08 Oct 2024 05:53 PM
Last Updated : 08 Oct 2024 05:53 PM

‘காலநிலை மாற்றத்தால் சென்னை, புதுச்சேரி கடலோர பகுதிகள் பாதிக்கும்’ - பேராசிரியர் ஜனகராஜன்

கோப்புப் படம்

புதுச்சேரி: காலநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயரும் போது சென்னை, புதுச்சேரி கடலோரப் பகுதிகள் பாதிக்கும் நிலையுள்ளது என இடைநிலை நீர் வள ஆய்வுகளுக்கான தெற்காசிய கூட்டமைப்பு தலைவரும் பேராசிரியருமான ஜனகராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை சார்பில் உலக தர நிர்ணய தின விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு காலநிலை மாற்றம் குறித்த தலைப்பில் ஜனகராஜன் பேசியது: “மக்கள் பயன்படுத்தும் செல்போன் முதல் அனைத்துக்கும் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், நாம் வாழ அவசியமான காற்று, கடல் ஆகியவற்றுக்கு தர நிர்ணயம் இல்லை. ஆகவே, இயற்கை மாசுபடுவதைத் தடுப்பதற்கான தர நிர்ணயத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

காலநிலை மாற்றத்தை தனிநபர் பிரச்சினையாக பார்ப்பதை விட உலக அளவிலான பொதுப் பிரச்சினையாக பார்ப்பது நல்லது. வருங்காலச் சந்ததியினருக்கு தற்போதைய இயற்கையை அப்படியே விட்டுச் செல்வது போன்ற வளர்ச்சியே நிலைத்தன்மையான வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி அக்டோபரில் நடந்தாலும், வெப்பத் தாக்கத்தால் கூட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு வெயில் கொளுத்திய நிலையில், மழையும் பெய்துள்ளது. ஆகவே, கணிக்க முடியாத வகையில் காலநிலை மாற்றம் உள்ளதையே இச்சம்பவம் காட்டுகிறது. அதன்படியே வெப்பத்தால் பல்லுயிர் அழிந்தால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.

வட, தென் துருவத்தில் உள்ள பனிப்பாறைகள் வெப்பத்தால் உருகி வருகின்றன. அதன்படி கடல் நீர் மட்டம் உயரும் நிலையுள்ளது. கடல் நீர் மட்டம் உயர்ந்தால் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்படும். நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை மரங்கள் மட்டும் தரவில்லை. ஓசோன் மூலமும் நமக்கு ஆக்சிஜன் கிடைக்கிறது. அதில் கடலின் பங்கு முக்கியமானது. ஆனால், நாம் தற்போது கடலை பெருங்குப்பைத் தொட்டியாக்கி வருகிறோம். அது சரியல்ல” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x