Published : 05 Sep 2024 07:35 PM
Last Updated : 05 Sep 2024 07:35 PM
சென்னை: கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால், தமிழக பகுதிக்கு நீர் வரத்து குறையும்போது, அப்பகுதியில் வாழும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வனத்துறை தலைவருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் அருகே உள்ள பெருகுடா பகுதியில் பாம்பாறின் (அமராவதி ஆறு) துணை ஆறுகளில் ஒன்றான சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கரில் வேளாண் பாசனம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறி, அத்திட்டத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும். பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தடுப்பணை திட்டத்தை நிறுத்துமாறு முதல்வர் ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினார்.
இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழ்களில் வந்த செய்தி அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. கேரள நீர்வள ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், “சிலந்தி ஆற்றின் குறுக்கே 45 மீட்டர் நீளமும், 1 மீட்டர் உயரமும் கொண்ட தடுப்பணை கட்டப்பட உள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தினமும் 3 மில்லியன் லிட்டர் நீரை எடுக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. காவிரி தீர்ப்பாயத்தின் படி கேரள மாநிலத்துக்கு கிடைக்கும் 3 டிஎம்சி நீரை கையாள தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது" தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பாம்பாற்றின் குறுக்கே எத்தனை இடங்களில் தடுப்பணை கட்டப்படுகிறது, கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் இன்று (செப்.5) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜராகி, சிலந்தி ஆற்றில் நீர்வரத்து குறைந்தால், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தார். தொடர்ந்து, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டினால், தமிழகத்துக்கு வரும் நீர் குறைந்தால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழக வனத்துறை தலைவர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர். பின்னர் மனு மீதான அடுத்த விசாரணையை அக்.21-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT