Published : 29 Aug 2024 06:34 AM
Last Updated : 29 Aug 2024 06:34 AM
சென்னை: தமிழகத்தில் ஒலி மாசுவை கட்டுப்படுத்த மாசுக்கட்டுப்பாடு வாரியம்சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் துறை சார்பில்முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த பசுமை புத்தாய்வு திட்டத்தின் முதலாமாண்டு நிறைவு விழாசென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், பசுமை புத்தாய்வு திட்டத்தின் ஓராண்டு பணிகளின் தொகுப்பு நூல் உள்ளிட்ட 7 நூல்களை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட்டார். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய சென்னை மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் உள்ளிட்ட 100 பேருக்கு பசுமை சாம்பியன் விருதுகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்த அளவுக்கு கட்டுப்படுத்தி வருகிறோம். கடந்த 80ஆண்டுகளுக்கும் மேலாக பிளாஸ்டிக் கழிவுகள் நிலத்தில் கிடக்கின்றன. அவைகளை சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம். அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு திட்டம் தொடங்கப்படும்.
தமிழக அரசின் அடுத்த இலக்கான நீர்நிலைகளை பாதுகாக்க நீலப்படை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் பல நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் நீர், காற்று மாசுவை கட்டுப்படுத்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. இனிவரும் காலங்களில் ஒலி மாசுவை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒலி மாசுவால் செவித்திறன், மூளை நரம்புகள் பாதிக்கப்படும். தற்போதுமக்களிடையே பெரிய விழிப்புணர்வு வந்திருக்கிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு தீபாவளியின்போது ஒலி மாசு குறைந்தது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் எம்.ஜெயந்தி, உறுப்பினர் செயலர் ஆர்.கண்ணன், காலநிலை மாற்றத்துறை இயக்க திட்ட உதவி இயக்குநர் விவேக்குமார், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ், பசுமை புத்தாக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT