Last Updated : 27 Aug, 2024 06:38 PM

 

Published : 27 Aug 2024 06:38 PM
Last Updated : 27 Aug 2024 06:38 PM

நாகர்கோவில் - வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரியும் தீயால் மக்கள் அவதி!

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்.

நாகர்கோவில்: வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2-வது நாளான இன்று தீயணைப்பு வீரர்கள் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. 8 தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாகர்கோவில் மாநகராட்சியின் 52 வார்டு பகுதிகளில் உள்ள குப்பைகள் பீச் ரோட்டில் உள்ள வலம்புரிவிளை உரக்கிடங்கில் மலைபோல் கொட்டப்படுகிறது. இங்கு வெயில் நேரம் மற்றும் அதிக காற்றடிக்கும் நேரங்களில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. வலம்புரிவிளை குப்பை கிடங்கை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளதாலும், முக்கிய போக்குவரத்து மிக்க இடமாக பீச் ரோடு இருப்பதாலும் தீ விபத்தின்போது புகைமூட்டம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், இந்த மாநகராட்சி குப்பை கிடங்கை குடியிருப்புகள் மற்றும் ஆள் நடமாட்டமில்லாத மாநகரின் பிற பகுதியில் மாற்ற வேண்டும் என 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (ஆக.26) வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் புகைமூட்டம் ஏற்பட்டு மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தேங்கிய குப்பைகளை கிளறிவிட்டு அணைக்கும் வகையில் ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மோட்டார் மூலம் தண்ணீரை அடித்தும் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை.

இன்று 2-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் குலசேகரம், களியக்காவிளை, தக்கலை, இரணியல் உட்பட 8 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்திருந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டனர். தீ ஓரளவு கட்டுக்குள் வந்தாலும் மலைபோல் தேங்கிய குப்பையின் அடிப்பகுதியில் பிடித்த தீயால் புகைமூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து தீயணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தீ விபத்தால் நாகர்கோவில் மாநகர பகுதியில் இருந்து வலம்புரிவிளை குப்பை கிடங்கு ஓரம் உள்ள சாலை வழியாக செல்லும் மக்களும், குடியிருப்பு வாசிகளும் அவதியடைந்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x