Published : 24 Aug 2024 07:50 PM
Last Updated : 24 Aug 2024 07:50 PM

பறவைகள் சரணாலயம் ஆகிறது சாமநத்தம் கண்மாய் - வனத்துறை தகவலால் மதுரை மக்கள் மகிழ்ச்சி!

சாமநத்தம் கண்மாய்

மதுரை: சாமநத்தம் கண்மாயை மதுரையின் முதலாவது பறவைகள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை தெரிவித்துள்ள தகவலால் பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை அவனியாரம் விமானநிலையம் அருகே சாமநத்தம் கண்மாய் அமைந்துள்ளது. கிருதுமால் நதியில் இருந்தும், வைகை ஆற்றில் இருந்தும் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. சுமார் 3 ஆயிரம் எண்ணிக்கையிலான பறவைகளை இந்தக் கண்மாயில் ஆண்டு முழுவதும் பார்க்க முடியும். செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான பறவைகள் வலசை காலங்களில் 12 ஆயிரம் எண்ணிக்கையிலான பறவைகளை பார்க்க முடியும். 155 வகையான பறவைகள், இந்த கண்மாயில் இருப்பதை இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன் நடராஜனும், அவரது குழுவினரும் கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்து ஆவணப்படுத்தியுள்ளனர்.

மேலும், பல பறவைகள் ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், இங்குள்ள வாழ்விட பறவைகளையும், வலசை வரக்கடிய பறவைகளையும் உறுதிப்படுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில் இறகுகள் அமரிதா இயற்கை அறக்கட்டளையும், மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையும் மதுரை மாவட்ட வனத்துறையிடம், மதுரையின் முதலாவது பறவைகள் சரணாலயமாக இந்த சாமநத்தம் கண்மாயை அறிவிக்க கோரிக்கை வைத்து வந்தனர்.

தற்போது இவர்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து, மாவட்ட வனத்துறை, மதுரையின் முதலாவது பறவைகள் சரணாலயமாக சாமநத்தம் கண்மாயை அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட வனத்துறை, மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளைக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: சாமநத்தம் கண்மாயினை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த சாமநத்தம் கண்மாயானது பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய் ஆகும். மேலும், இந்த கண்மாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் உள்ளது. வனத்துறை மூலம் கடந்த ஆண்டு நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் நூற்றுக்கணக்கான பல வகைப்பட்ட பறவைகள் இங்கு காணப்பட்டது. எனவே, இந்த கண்மாயினை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறையினரிடம் இருந்து புல எண் விவரங்களை பெற்று பறவைகள் சரணாலயமாக அறிவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை அமைப்பை சேர்ந்த தமிழ்தாசன் கூறுகையில், ‘‘சாமநத்தம் கண்மாய்க்கு வரக்கடிய 155 வகையான பறவைகளில் 40 வகை பறவைகள் வலசை வரக்கூடியவை. 9 வகை பறவைகள் அச்சுறுத்தலை சந்திக்கூடிய ( அழியும்நிலையில் உள்ளவை) பறவைகள். இந்த கண்மாயை சரணாலயமாக அறிவிப்பதால் இந்த கண்மாயில் உள்ள வாழ்விட பறவைகள், வலசை வரக்கூடிய பறவைகள் பாதுகாக்கப்படும்.

கடந்த காலத்தில் இந்த கண்மாயில் நாட்டு கருவேலம் மரங்கள் அதிகளவு இருந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த மரங்கள் வெட்டப்பட்டன. அந்த மரங்கள், பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கான வாய்ப்பாக இருந்து வந்தன. அதனால், மீண்டும் இந்த கண்மாயில் நாட்டு மரங்களை நட வேண்டும் என பறவையியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பறவைகள் சரணாலயம் அமைக்கும்போது, பறவைகளையும், இந்த கண்மாயையும் பாதுகாக்க உயர் கண்காணிப்பு கோபுரம் ஆங்காங்கே அமைக்கப்பட வேண்டும். உள்ளூர் மக்களிடம் மீன்பிடிப்பதை ஒழுங்குப்படுத்த ஒரு எல்லைக்குள் மேல் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மதுரை மாவட்ட பள்ளிகளில் வனத்துறை, சரணாலயமாக அமையப்போகும் இந்த கண்மாயின் முக்கியத்துவத்தை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x