Published : 21 Aug 2024 02:12 PM
Last Updated : 21 Aug 2024 02:12 PM

கூடலூரில் 2 புலிகள் விஷம் வைத்துக் கொலை: போலீஸ் விசாரணை

கூடலூர்: கூடலூரில் 2 புலிகள் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் சிக்ஸ் பகுதியில் இறந்த இரு புலிகள் விஷத்தால் உயிரிழந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பிதர்காடு பகுதியில் உள்ள சசக்ஸ் என்ற இடத்தில் தனியார் தோட்டத்தில் ஒரு புலி குட்டி இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. பிதர்காடு சரகர் ரவி மற்றும் கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர் அப்போது 4 வயது ஆண் புலி ஒன்று இறந்து கிடந்தது. அந்த பகுதியை சுற்றி வனத்துறையினர் ஆய்வு செய்தபோது குட்டி இறந்த இடத்திலிருந்து 75 மீட்டர் தூரத்தில் எட்டு வயது பெண் புலி ஒன்றும் இறந்து கிடந்தது.

வனத்துறையினர் புலிகளின் உடலை ஆய்வு செய்தபோது இரண்டு புலிகளின் உடலில் காயங்கள் இருந்தன. முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் அங்கு வந்து இரண்டு புலிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து உடல் உறுப்புகளை ரசாயன பரிசோதனைக்காக சேகரித்தார். இது குறித்து வனத்துறை அதிகாரி வெங்கடேஷ் பிரபு கூறும் போது, ‘இரண்டு புலிகள் இறந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஒரு காட்டுப்பன்றி இறந்து இருப்பதை விசாரணை குழு கண்டறிந்தது.பின்பு அங்கு சென்று பார்த்த போது அந்த இறந்த காட்டுப்பன்றி உடல் அருகில் இரண்டு புலிகளின் கால் தடங்கள் இருப்பது காணப்பட்டது.

அதை இறந்த இரு புலிகளின் கால் தடையங்களை வைத்து சரிபார்க்கப்பட்டது. கால் தடையங்கள் ஒன்று போல் இருந்தது.மேலும் காட்டுப்பன்றியின் உடலை முக்கால்வாசி புலிகள் சாப்பிட்டதாக தெரியவந்தது. புலியின் வயிற்று பகுதியில் சிறிதளவு இருந்தது. அதை மருத்துவர் பார்க்கும் போது, அதில் அரிசி, மரவள்ளி கிழங்கு போன்றவை இருந்ததில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டது.

பின்பு இரண்டு புலிகளின் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. புலிகளின் வயிற்றுக்குள் காட்டுப்பன்றியின் மாமிசம் இருந்தது. மேலும் இரண்டு புலிகளின் உள் உறுப்புகளை பார்க்கும் போது விஷத்தினால் இறந்திருக்க கூடும் என மருத்துவர்களால் அறியப்படுகிறது. இதிலிருந்து, விஷத்தினால் இரு புலிகள் இறந்திருக்க கூடும் என தெரிய வருகிறது. காட்டுப்பன்றி ஏதாவது விஷம் கலந்த உணவினை சாப்பிட்டு அந்த காட்டுப்பன்றியை புலிகள் அடித்து சாப்பிட்டதால் காட்டுப்பன்றி மற்றும் புலிகள் இறந்து இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

புலிகள் மற்றும் காட்டுபன்றியின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்க செய்யப்பட்டுள்ளது. அதனை ஆய்வகத்திற்கு அனுப்பி அறிக்கை பெறப்படும். மேலும் வன உயரின வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அந்த பகுதிகளில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த பகுதி முழுவதும் இரு சரகர்கள் தலைமையில் வனப்பணியாளர்களை குழுக்களாக பிரிக்கப்பட்டு விசாரணையும், தேடுதல் பணியும் நடந்து வருகிறது. உதவி வனப்பாதுகாவலர், வனப்பதுகாப்பு படை இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x