Published : 10 Aug 2024 07:05 PM
Last Updated : 10 Aug 2024 07:05 PM

பருவ நிலையைத் தாங்கி உயர் விளைச்சல் தரக்கூடிய 109 பயிர் ரகங்களை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: பருவநிலையைத் தாங்கி, உயர் விளைச்சல் தரக்கூடிய, உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆக.11) வெளியிட உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பருவநிலையைத் தாங்கி, உயர் விளைச்சல் தரக்கூடிய உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 11 அன்று காலை 11 மணியளவில் புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவார்.

34 வயல் பயிர்கள் மற்றும் 27 தோட்டக்கலை பயிர்கள் உட்பட 61 பயிர்களில் 109 ரகங்களை பிரதமர் வெளியிடுவார். வயல் பயிர்களில், சிறுதானியங்கள், தீவனப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி, நார்ச்சத்து மற்றும் பிற சாத்தியமான பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு தானியங்களின் விதைகள் வெளியிடப்படும். தோட்டக்கலைப் பயிர்களில், பல்வேறு வகையான பழங்கள், காய்கறி பயிர்கள், தோட்டப் பயிர்கள், கிழங்கு பயிர்கள், மசாலாப் பொருட்கள், பூக்கள் மற்றும் மூலிகைப் பயிர்கள் வெளியிடப்படும்.

நீடித்த வேளாண்மை மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் வழிமுறைகளைப் பின்பற்றுவதை பிரதமர் மோடி எப்போதும் ஊக்குவித்து வருகிறார். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க மதிய உணவு, அங்கன்வாடி போன்ற பல அரசு திட்டங்களுடன் உயிரி செறிவூட்டப்பட்ட பயிர் வகைகளை இணைப்பதன் மூலம் அவற்றை ஊக்குவிப்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு தொழில்முனைவுக்கான புதிய வழிகளை திறக்கும் என்று பிரதமர் கூறுகிறார். 109 உயர் விளைச்சல் ரகங்களை வெளியிடுவதற்கான இந்த நடவடிக்கை இந்தத் திசையில் மற்றொரு படியாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x