Published : 09 Aug 2024 08:12 PM
Last Updated : 09 Aug 2024 08:12 PM

எண்ணூர், பழவேற்காடு பகுதிகளில் காக்கா ஆழி சிப்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: எண்ணூர் முகத்துவாரம், பழவேற்காடு பகுதிகளில் காக்கா ஆழி வகை சிப்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூரை சேர்ந்த மீனவர் குமரேசன் சூளூரான் என்பவர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பழவேற்காடு உவர் நீர் ஏரி, எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் தென் அமெரிக்க உயிரினமான காக்கா ஆழி வகை சிப்பிகள் அதிக அளவில் பெருகி வருகின்றன. இவை மீன்கள், இறால், நண்டு உற்பத்தியை தடுப்பதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் அவை தரை பரப்பில் பாறை போன்று படிந்திருப்பதால் படகுகளையும் இயக்க முடியவில்லை. எனவே இந்த காக்கா ஆழி வகை சிப்பிகளை முழுவதுமாக அகற்ற தொடர்புடைய துறைக்கு உத்தரவிட வேண்டும், என்று கோரியிருந்தார்.

இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நீர்வளத்துறையின் ஆரணியாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் தாக்கல் செய்த அறிக்கையில், “காக்கா ஆழி வகை சிப்பிகள் வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. இவை நீர் பரப்பிலிருந்து 30 செமீ ஆழம் வரை படர்ந்திருக்கிறது. இதனால் படகுகள் இயக்கம் பாதிக்கும்,” என குறிப்பிட்டுள்ளார்.

நீர்வள ஆதாரத் துறை செயலர் தாக்கல் செய்த அறிக்கையில், “இந்த சிப்பிகள், கொசஸ்தலையாறு முதல் எண்ணூர் முகத்துவாரம் மற்றும் பழவேற்காடு ஏரி வரை சுமார் 6 கிமீ நீளத்துக்கு பரவியுள்ளது. இதனால் இறால், நண்டு இனப்பெருக்கம் பாதிக்கட்டுள்ளது. இவற்றை தமிழ்நாடு ஈரநில ஆணையத்துடன் இணந்து ரூ.8 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது,” என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இதுவரை சிப்பிகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் எண்ணூர், சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகங்கள் வந்தாலும், முதலில் இந்த சிப்பிகளை அகற்றிவிட்டு, செலவினத்தை உரிய துறையிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம். எனவே, தலைமைச் செயலர் தலைமையில், சுற்றுச்சூழல், மீன் வளம், நீர்வளம் ஆகிய துறைகளின் செயலர்கள், ஈரநில ஆணைய உறுப்பினர் செயலர், 3 துறைமுகங்களின் தலைவர்கள் கூடி, கலந்தாலோசித்து சிப்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பான அறிக்கையை, இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளான ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்ய வேண்டும், என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x