Published : 07 Aug 2024 05:36 PM
Last Updated : 07 Aug 2024 05:36 PM
சென்னை: “கடல் வளங்களின் பாதுகாப்பில் விண்வெளி தொழில்நுட்பங்கள் முக்கிய பங்காற்றுகிறது” என்று இஸ்ரோ விஞ்ஞானி கே.என்.பாபு தெரிவித்தார்.
தேசிய விண்வெளி தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய, மாநில மீன்வளத் துறை சார்பில் ‘மீன்வளத் துறையில் விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாடு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை ராயபுரத்தில் உள்ள இந்திய மீன்வள அளவை மைய வளாகத்தில் இன்று (ஆக.7) நடைபெற்றது.இதில், இந்திய மீன்வள அளவை மையத்தின் (எப்எஸ்ஐ) மண்டல இயக்குநர் அ.திபுர்சியஸ், சிப்நெட் நிறுவன இணை இயக்குநர் ஏ.ரவிச்சந்திரன், தமிழக மீன்வளத் துறை உதவி இயக்குநர் செந்தில் குமார் உட்பட துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்றுப் பேசினர்.
மேலும், கருத்தரங்கில் மீனவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு மீன்பிடித்தல் மற்றும் பேரிடர் காலங்களில் செயற்கைக்கோள்களின் பங்களிப்பு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எஃப்எஸ்ஐ மையத்தின் மண்டல இயக்குநர் அ.திபுர்சியஸ் பேசியதாவது: “சந்திராயன்-3 திட்டத்தின் வெற்றியை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
புவி சுற்றுச்சூழல் அமைப்புகளை புரிந்து கொள்ளவும், அதில் உள்ள சிக்கல்களை களையவும் விண்வெளி தொழில்நுட்பம் உதவிகரமாக உள்ளது. கடல் சூழ்நிலைகள் மற்றும் அதிலுள்ள உயிரினங்களை கண்காணிப்பதில் விண்வெளி தொழில்நுட்பங்கள் நமக்கு உதவுகின்றன. இந்த செயற்கைக்கோள்கள் கடல் மேற்பரப்பு வெப்பநிலை, நீரோட்டங்கள் பற்றிய புள்ளி விவரங்களை மிகவும் துல்லியமாக வழங்குகிறது.
அதேபோல், மீன்வளங்களின் மொத்த எண்ணிக்கையை (Total number of fish stocks ) கண்காணிக்கவும் பயன்படுகிறது. இதுதவிர, சட்ட விரோத மற்றும் எல்லை தாண்டிய மீன்பிடிப்பை தடுப்பதற்கு வழிசெய்கிறது. நமக்கு கிடைக்கும் தரவுகள் மூலம், அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாத்து, கடல் வளங்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடியும். நமது கடல்களுக்கும், அவற்றை சார்ந்துள்ள சமூகங்களுக்கும் நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்ய விண்வெளி தொழில்நுட்பத்தின் ஆற்றலை பயன்படுத்தலாம்,” என்று அவர் பேசினார்.
இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் விஞ்ஞானி கே.என்.பாபு காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பேசும்போது, “கடல் வளங்கள் மற்றும் மீனவர்களின் பாதுகாப்பில் விண்வெளி தொழில்நுட்பங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அதன்படி செயற்கைக்கோள் மூலம் கடலில் மீன்வளம் அதிகமுள்ள இடங்கள், புயல், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்கள் மீனவர்களுக்கு தரப்படுகிறது.
இஸ்ரோவின் டிரான்ஸ்பாண்டரை படகுகளில் பொருந்தியிருந்தால் மீனவர்கள் கடலில் எங்கு இருக்கிறார்கள்? என்பதை கண்காணிக்க முடியும். அவர்கள் தீ விபத்து போன்ற ஏதேனும் ஆபத்துகளில் மாட்டிக் கொண்டால் மீட்பதற்கு உதவிகரமாக இருக்கும். இத்தகைய வசதிகளை மீனவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT