Last Updated : 31 Jul, 2024 05:13 PM

 

Published : 31 Jul 2024 05:13 PM
Last Updated : 31 Jul 2024 05:13 PM

இது 2-வது பயங்கர நிலச்சரிவு: மனிதர்கள் வாழ தகுதியற்றதா வயநாட்டின் முண்டக்கை பகுதி? | HTT Explainer

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது. இது, புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி நிலவரம். இதுவரை 225 பேரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், பெரும் பாதிப்புக்கு உள்ளான முண்டக்கை பகுதி குறித்த விரைவுப் பார்வை இது...

கிட்டத்தட்ட 150+ பலிகளோடு வயநாட்டின் முண்டக்கை மீண்டுமொரு சோக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. வயநாட்டை பற்றி அறிந்தவர்களுக்கு முண்டக்கை பகுதியை பற்றியும் தெரிந்திருக்கும். அதன் அழகுக்காக அறிந்தவர்கள் மத்தியில் முண்டக்கையின் இருண்ட பக்கத்தை பற்றி அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. பேரிடர்களுக்கு பிடித்த நகரம்தான் இந்த முண்டக்கை என்று கவலையுடன் சொல்வது உண்டு. கடந்த நான்கு தசாப்தங்களில், அதாவது 40 ஆண்டுகளில் இரண்டு மிகப் பெரிய நிலச்சரிவுகளை சந்தித்திருப்பதே இத்தகைய பெயரைப் பிடிக்க காரணம்.

ஜூலை 1, 1984 அன்றும் இதேபோல் அதி கனமழையை பதிவு செய்த முண்டக்கை, அதனால் 14 உயிர்களைப் பறித்த பெரிய நிலச்சரிவை கண்டது. அப்போது கேரள மாநிலத்தில் பதிவான நிலச்சரிவுகளில் மிகப் பெரியது என்றால், அது இதுதான். நிலச்சரிவு ஏற்பட்ட அன்றைய நாளில் இப்பகுதியில் 340 மி.மீ மழை பெய்ததாக சொல்லப்படுகிறது. இது தென்மேற்குப் பருவமழை காலத்தில் பொழியும் சராசரிக்கும் மேலான மழைப் பொழிவு என்கிறது ஒரு தரவு. இந்த அதி கனமழையால் நிலச்சரிவு உண்டாக, அதனால் வீடுகள் மண்ணோடு மண்ணாக 1.5 கி.மீ தூரம் அடித்துச் செல்லப்பட்டன. அப்போதும், முண்டக்கை பகுதியில் பாயும் சாலியாற்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டன. இதில் கூடுதல் சோகம் என்னவென்றால், மண்ணுக்குள் புதைந்த சில உடல்களை மீட்கவே முடியவில்லை.

1984 ஜூலை 13-ல் கேரள சட்டசபையில் பேசிய அப்போதைய வருவாய்த் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப், "நிலச்சரிவினால் மண்ணுக்குள் புதைந்த உடல்களை மீட்பது கடினம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நிபுணர்களின் இந்தக் கருத்தின் அடிப்படையில் பூமியை தோண்டும் செயல்முறை நிறுத்தப்பட்டது. தீயணைப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் இறந்தவர்களின் உடல்கள் எங்கே என்று கண்டுபிடிக்க முடியவில்லை" என்று தெரிவித்தார். இறந்தவர்களின் உடல்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில், முண்டக்கை பகுதியைச் சேர்ந்த அன்னக்குட்டி என்கிற பெண் தனது 16 வயது ஷாஜியின் துண்டிக்கப்பட்ட பாதத்தை துணியில் சுற்றி கொண்டு சென்ற புகைப்படம், அப்போது நடந்த நிலச்சரிவின் கோரத்தை சாட்சியாக அமைந்தது.

இதன்பின் அவ்வப்போது முண்டக்கையில் நிலச்சரிவுகள் ஏற்படுவது வாடிக்கை. 2019 ஆகஸ்ட் மாதத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆனால், அப்போது அருகில் உள்ள புதுமலையில் ஏற்பட்ட நிலச்சரிவு கிட்டத்தட்ட 17 உயிர்களை பலிகொண்டதால், முண்டக்கை பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால், செவ்வாய்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு 100-க்கும் மேற்பட்ட உயிர்களை தூக்கத்தோடு தூக்கமாக கலக்கவைத்துவிட்டது. முண்டக்கை வரலாற்றில் மிகப் பெரிய துயரை ஏற்படுத்திய நிலச்சரிவாக இது அமைந்தது.

முண்டக்கை பகுதியில் செவ்வாய்கிழமை 24 மணி நேரத்தில் 370 மிமீ மழை பதிவானதே, மிகப் பெரிய பேரிடர் ஏற்பட காரணமாக அமைந்தது. 1984-ல் 1.5 கிமீ வரை அடித்துச் செல்லப்பட்ட மணல், இம்முறை 6 கி.மீ அடித்துச் செல்லப்பட்டது. முண்டக்கை பகுதி மனிதர்கள் வாழத் தகுதியற்றவை என்பது சுற்றுச்சூழல் நிபுணர்கள், ஆர்வலர்களின் உறுதியான மேற்கோள். கேரளம் சமீபத்தில் கண்ட மிகப் பெரிய நிலச்சரிவுகள் அனைத்தும் முண்டக்கையை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவானவையே.

1992-ம் ஆண்டு 11 பேர் உயிரிழந்த கப்பிக்களம், 2007-ல் 4 பேர் உயிரிழந்த வளம்தோடு, 2019, 2020-ல் பல உயிர்களை பலிகொண்ட புதுமலை நிலச்சரிவு, 1984-ல் முதல் நிலச்சரிவு ஏற்பட்ட வெள்ளரிமலை என அனைத்தும் முண்டக்கையை சுற்றியே. வெள்ளரிமலை என்ற மலை பகுதியை சுற்றி அமைந்துள்ள இந்த ஊர்கள் மனிதர்கள் வாழத் தகுதியற்றவை என்கிறது கல்பெட்டாவில் அமைத்துள்ள சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு உயிரியல் மையமான ‘ஹியூம்’.

சூழலியலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் இடம்பெற்றுள்ள இந்த ஹியூம் மையம், "600 மி.மீட்டரையொட்டி மழைப்பொழிவு எப்போது எல்லாம் இங்கு பெய்கிறதோ, அப்போதெல்லாம் இங்கு நிலச்சரிவு கட்டாயம் ஏற்படுகிறது" என்று எச்சரிப்பதோடு, "முண்டக்கை பகுதி மனிதர்கள் வசிக்கத் தகுதியற்றது" என்றும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், “பருவநிலை மாற்றமும் மனிதர்களின் இயற்கைக்கு புறம்பான செயல்பாடுகளும் இத்தகைய அதிபயங்கரமான நிலச்சரிவு ஏற்பட முக்கிய காரணிகள் என்பதை மறுப்பதற்கில்லை” என்று கூறும் இந்திய வெப்பமண்டல வானியல் ஆய்வு நிறுவன விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கால் முன்வைக்கும் அறிவுறுத்தலும் சற்றே முக்கியத்துவம் வாய்ந்தது. “நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு அப்பகுதி வாழ் மக்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட வேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் முன்னறிவிப்பை வழங்கினால் பல உயிர்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் நிச்சயம் பாதுகாக்க முடியும்” என்பதே அந்தப் பரிந்துரை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x