Published : 30 Jul 2024 04:57 PM
Last Updated : 30 Jul 2024 04:57 PM
குன்னூர்: பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது மறுசுழற்சி பாட்டில்கள் மூலமாக ரூ.5-க்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வ அமைப்பு தொடங்கியுள்ளது.
நீலகிரி மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள பர்லியாறு, குஞ்சப்பனை, கக்கனல்லா, நாடுகாணி, தாளூர், சோலாடி, பாட்டவயல், நம்பியார்குன்னு, கெத்தை உட்பட அனைத்து சோதனைச்சாவடிகள் முதல் உதகை வரையிலான நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள அனைத்து கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உணவுப் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒரு லிட்டர் மற்றும் ½ லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு, மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுசுழற்சி செய்யக்கூடிய பாட்டில்கள் மற்றும் கேன்களை குடிநீர் பாட்டில்களுக்கு மாற்று பொருளாக பயன்படுத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்டில் குடிநீர் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குடிநீர் பெற ஏதுவாக, மாவட்டத்தின் நெடுஞ்சாலைகள், சுற்றுலா தலங்கள், பொது இடங்கள் என 70 இடங்களில் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில், சுத்திகரிக்கும் குடிநீர் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ரூ.5 செலுத்தி ஒரு லிட்டர் தண்ணீர் பெற்றுக்கொள்ளும் வகையில், இந்த ஏடிஎம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தின் நுழைவு வாயில்களில் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடம் சோதனை மேற்கொண்டு, அபராதம் விதித்து பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இதனால், நீலகிரி மாவட்டத்துக்குள் வரும் சுற்றுலா பயணிகள், குடிநீர் கொண்டுவர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். பல இடங்களில் தண்ணீர் ஏடிஎம்கள் பழுதடைந்துள்ளதாலும், பெரும்பாலான கடைகளில் 5 லிட்டர் குடிநீர் பாட்டில் விற்பனை இல்லாததாலும் சுற்றுலா பயணிகள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில், மறுசுழற்சி பாட்டில்கள் மூலமாக ரூ.5-க்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து குன்னூர் ஜேசிஐ தன்னார்வ அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பினரின் முயற்சி, சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுதொடர்பாக குன்னூர் ஜேசிஐ தலைவர் விஜயகாந்த் கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மறுசுழற்சி செய்யும் பாட்டில்கள் மூலமாக, ரூ.5-க்கு குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் உள்ள நுழைவுவாயில்களில், பழங்குடியினர், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை பணியில் அமர்த்தி இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வனப்பரப்புகளை அதிகரிக்க இரண்டு மாதத்தில் ஒரு லட்சம் விதைப் பந்துகள் விதைக்கும் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் விலங்குகள், அதற்கு தேவையான உணவு மற்றும் பழங்கள் வனப்பகுதிகளிலேயே கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT