Published : 25 Jul 2024 01:36 PM
Last Updated : 25 Jul 2024 01:36 PM
கோவை: இந்தியாவைப் பொறுத்தவரை வேளாண்மைத் துறையில் உணவு பாதுகாப்பில் தொடங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரையில் பெண்களின் பங்களிப்பு அத்தியாவசியமாகவும், அவசியமாகவும் உள்ளது. உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மேதா பட்கர், வந்தனா சிவா ஆகியோர் பெரிய அளவில் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். கோவையில் சித்தார்த் பவுண்டேஷன் என்ற அமைப்பு பெண்களை மட்டும் மையப்படுத்தி ஈர நில பறவைகள் கண்காணிப்பை கடந்த 2023 மே முதல் செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்து, சித்தார்த் பவுண்டேஷன் தன்னார்வலர் ஹர்ஷிதா கூறியதாவது: இயற்கையை புரிந்து கொள்வதற்கும், அவர்களைச் சுற்றியுள்ள இயற்கையைப் பாராட்டுவதற்கும் இயற்கையின் விழிப்புணர்வுப் பயணத்தைத் தொடங்கவும் அனைத்துத் துறைகளையும் சேர்ந்த பெண்களைக் கொண்டு வருவது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். குறிப்பாக பெண் சமூகத்துக்கான இயற்கை கல்வி முயற்சியாகும். மகளிர் பங்கேற்கும் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு மே 2023 இல் சர்வதேச பல்லுயிர் தினத்தன்று தொடங்கப்பட்டது. கோவை நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 9 குளங்களை கண்காணித்துள்ளது. இந்த சமூக அணுகுமுறையின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம், இயற்கையில் தன் உணர்வு உள்ள தனிநபர்களை உருவாக்குவதாகும்.
ஈரநில கண்காணிப்பு, ஒரு தளமாக அனைத்து தரப்பு பெண்களுக்கும் பொதுவான மேடையாக அமைந்து, நேரடி கண்காணிப்புகள் மூலம் தங்களைச் சுற்றியுள்ள பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்தவும், ஆராயவும், வளர்க்கவும் ஓர் இணக்கமான சூழலைக் கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக, ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சி தவறாமல் நடத்தப்படுகிறது. கோவை மாநகரத்தில் இதுவரை 9 ஈரநிலக் கண்காணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. சுமார் 200 பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்துள்ளனர். ஒவ்வொருவரும் சுமார் 30-க்கும் மேற்பட்ட பறவைகளை பார்த்து ரசித்துள்ளனர். குறிப்பாக வெள்ளை அரிவாள் மூக்கன், செந்நாரை, சாம்பல் நாரை, நீர் காகம், பாம்புதாரா, கரிச்சான் குருவி, ஊதா தேன் சிட்டு, சின்னான், சாம்பல் தலை நாகணவாய், சாம்பல் கதிர் கருவி உட்பட சுமார் 106 வகை பறவை இனங்களை பார்த்துள்ளனர்.
நீர் நிலைகளில் பறவைகளை காண்பதற்காக பைனாகுலர்களை வழங்குகிறோம். அதன்மூலம் பறவை நோக்குதலில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் பறவைகளை காண முடிகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒருமித்த எண்ணம் கொண்ட அனைத்து வயதுடைய பெண்களும் கலந்து கொண்டனர். இதுபோன்ற பரந்த அளவிலான பார்வையாளர்களை ஆதரிப்பதற்காக, பல வருட இயற்கை கல்வி அறிவைக்கொண்ட எங்கள் நிபுணர் குழு, இயற்கை அழகின் நுணுக்கங்களை தங்கள் அறிவியல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தகவல்கள் மூலம் வெளிப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு எங்கள் திட்ட மேலாளர் டாக்டர் சைத்ரா ஸ்ரீ தலைமை வகித்தார். அவர் ஒரு விஞ்ஞானி மற்றும் அனுபவம் வாய்ந்த இயற்கை கல்வியாளர் ஆவார். நிர்வாக அறங்காவலர் அனூப் ராஜ், மகளிர் ஈரநிலக் கண்காணிப்பைத் தொடங்கிய தூண்களில் ஒருவர். எங்கள் அமைப்பில் விஞ்ஞானியும், இயற்கை கல்வியாளருமான டாக்டர் ராஜன் உள்ளார். அவர்களைத் தவிர, இரண்டு எம்.எஸ்சி பட்டதாரிகளும் ஈரநிலம் கண்காணிப்பின் போது பங்கேற்பாளர்களை நெறிப்படுத்துவதற்கு உதவி வருகின்றனர். மகளிர் ஈர நில கண்காணிப்பு நிகழ்ச்சி பல்வேறு வகையான பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது.
அங்கு பங்கேற்பாளர்கள் ஒருவருக்கொருவர் ஒரு பொதுவான களத்தையும், நிகழ்ச்சியையும் தங்கள் தனித்துவமான வழியில் அனுபவித்தனர். இதில் பங்கேற்ற 200 பெண்களில், 56% மாணவர்கள், 31% தொழில் வல்லுநர்கள் மற்றும் 7% இல்லத்தரசிகள் ஆவர். நிகழ்ச்சியின் மூலம் பங்கேற்பாளர்கள் 106 பறவைகளை கண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT